டாக்கா: வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இதையடுத்து வங்கதேச நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தற்போது அங்கு இடைக்கால அரசு அமைந்துள்ளது. இருந்தபோதும் அங்கு இந்துக்கள் மீதும், இந்து கோயில்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
ஆனால், டாக்காவிலுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஸ்ரீ தாக்கேஸ்வரி கோயிலுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் இந்துக்களும், முஸ்லிம் களும் அதற்கு பாதுகாப்பு அரணாய் நின்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மிகவும் பழமை வாய்ந்த தாக்கேஸ்வரி நேஷனல் கோயிலுக்கு, மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிஸ்வாமிகள் கடந்த 2000-ம் ஆண்டில் வருகை தந்திருந்தார்.
இதுகுறித்து இந்தக் கோயிலில் கடந்த 15 ஆண்டுகளாக அர்ச்சகராக பணிபுரியும் ஆஷிம் மைத்ரோ கூறியதாவது: மிகவும் பிரசித்தி பெற்ற இந்தக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த ஆக. 5-ம் தேதிக்குப் பிறகு இங்கு கலவரங்கள் நடந்தன. அப்போது கோயிலைத் தாக்கவும் முயற்சி நடந்தது. ஆனால் இங்குள்ள இந்துக்கள், முஸ்லிம்கள், இதர மதத்தைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு பாதுகாப்பு அரணாக நின்று தாக்குதல் நடைபெற விடாமல் தடுத்தனர்.
ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடந்து கொண்டிருந்தபோதும் இங்கு தினமும் பூஜைகள் தடையின்றி நடைபெற்று வருகின்றன. இன்று வரை பூஜைகள் தடைபெறாமல் நடந்து வருகின்றன.
அண்மையில் இடைக்கால அரசு பொறுப்பேற்றபோது அதன் தலைவர் முகமது யூனுஸ் இங்கு வந்திருந்தார். இங்கு குழுமியிருந்த இந்து அமைப்பினருடன் அவர்பேச்சுவார்த்தை நடத்தி விட்டுச்சென்றார். இடைக்கால அரசுபொறுப்பேற்ற பின்னர் கோயிலுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தற்போது இரவு, பகலாக அவர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். இவ்வாறு ஆஷிம் மைத்ரோ கூறினார்.