Doctor Vikatan: நீராவிக்குளியல் எடுப்பது உண்மையிலேயே நல்லதா… எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா…. அதனால் விரைவில் எடை குறையும் என்பது உண்மையா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கூந்தல் மற்றும் சரும சிகிச்சை மருத்துவர் தலத் சலீம்.
தலை பாரமாக இருந்தாலோ, சளி பிடித்திருந்தாலோ வெந்நீரை சூடாக்கி, மருந்துகள் அல்லது மூலிகைகள் சேர்த்து ஆவி பிடிக்கிற வழக்கம் நம்மிடம் இருக்கிறது. அதன் மூலம் உடலிலுள்ள தேவையற்ற நீர் வெளியேறி, தலை பாரம் நீங்கி, சுவாசப்பாதை சீராகிறது. ஸ்டீம் பாத் எனப்படும் நீராவிக் குளியலும் கிட்டத்தட்ட அப்படித்தான்.
ஸ்டீம் பாத் எனப்படும் நீராவிக்குளியல், மிகப் பழைமையான மருத்துவ முறைகளில் இருந்திருக்கிறது. அதாவது எகிப்தியர்களும் கிரேக்கர்களும் நீராவிக் குளியல் எடுப்பதை அவர்கள் வாழ்க்கை முறையாகவே பின்பற்றியிருக்கிறார்கள். சூடான நீராவியைப் பரவச் செய்வதன் மூலம், உடலிலுள்ள தேவையற்ற நீர், வியர்வையாக வெளியேறும். ரத்த ஓட்டத்தை சீராக்குவது, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, ரத்த அழுத்த அளவை சரியாக வைப்பது, வொர்க் அவுட்டுக்கு பிறகான உடல் களைப்பைப் போக்குவது, தசைகளின் இறுக்கத்தைத் தளர்த்துவது என இதன் பலன்கள் எக்கச்சக்கம்.
மிக முக்கியமாக, ஸ்ட்ரெஸ் குறைய ஸ்டீம் பாத் உதவுகிறது. சில ஜிம்களில் ஸ்டீம் பாத் வசதியும் இருப்பதைப் பார்க்கலாம். குறிப்பிட்ட நாள்களுக்கொரு முறை ஸ்டீம் பாத் எடுப்பதன் மூலம், எடைக்குறைப்பும் துரிதமாவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஸ்டீம் பாத் எடுக்கும்போது உடலிலிருந்து நிறைய நீர்ச்சத்து வெளியேறும். அதை ஈடுகட்டவும், உடலில் நீர் வறட்சி ஏற்படாமலிருக்கவும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம்.
இத்தனை பலன்கள் இருந்தாலும், ஸ்டீம்பாத் எடுக்கும்போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எடைக்குறைப்புக்கு உதவும் என்பதற்காக அடிக்கடி இதைச் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் உடலில் டீஹைட்ரேஷன் எனப்படும் நீரிழப்பு ஏற்படும். குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், ஏதேனும் சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்டீம் பாத் எடுக்க வேண்டும்.
மருத்துவ சிகிச்சை மையங்களில் மூலிகைகளைப் பயன்படுத்தியும் ஸ்டீம் பாத் கொடுப்பார்கள். அது உடலிலுள்ள நச்சுகளை நீக்குவதிலிருந்து, மூட்டுவலி, உடல்வலி என பிரத்யேக பிரச்னைகளுக்கான சிகிச்சையாகவும் பரிந்துரைக்கப்படும். முறையான மருத்துவரின் ஆலோசனையோடு எடுத்துக்கொள்ளும்போது ஸ்டீம் பாத் நல்ல சிகிச்சையாகவும் பலனளிக்கும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.