டெல் அவில்: காசாவில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் ஏழு பேர் இறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளையில், லெபனானின் தெற்கு எல்லையில் இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் கடும் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பதற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கிய மறுநாள் முதல் இஸ்ரேல் – லெபனான் எல்லையில் தினசரி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த ஜூலை 30-ம் தேதி லெபனானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் ஃபவத் ஷுக்ர் உயிரிழந்தார். இதன்பிறகு, இருதரப்புக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது.
ஹிஸ்புல்லாவின் ராக்கெட் மற்றும் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க தெற்கு லெபனான் முழுவதும் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேவேளையில், ஞாயிற்றுக்கிழமை காலை ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவின் ஆயிரக்கணக்கான ராக்கெட் லாஞ்சர்களை அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மூன்று போராளிகள் கொல்லப்பட்டதாக ஹிஸ்புல்லாவும், அதன் கூட்டாளிகளும் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலின் ராணுவத் தளங்களைக் குறிவைத்து சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏகணைகளை ஏவி தாக்குதல் மேற்கொண்டதாக ஹிஸ்புல்லா அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இஸ்ரேல் தரப்பிலும் லெபனான் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. டெல் அவிவில் இருந்து 1.5 கிமீ (0.9 மைல்) தொலைவில் உள்ள இஸ்ரேலிய எல்லைக்குள் சுமார் 110 கிமீ தொலைவில் உள்ள இராணுவ புலனாய்வு தளத்தை குறிவைத்ததாக ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு தொலைக்காட்சி உரையில் கூறினார். திட்டமிட்டபடி ஹிஸ்புல்லாவால் அதன் தாக்குதலை நடத்த முடிந்தது என்றும் கூறப்படுகிறது.
“இஸ்ரேல் போரை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் எங்கள் குடிமக்களைப் பாதுகாக்க என்ன வேண்டுமானாலும் செய்வோம்” என்று இஸ்ரேல் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு பேர் இறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வரை காசா மீதான இஸ்ரேலின் போரில் 40,435 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 93,534 பேர் காயமடைந்துள்ளனர். ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களின் போது இஸ்ரேலில் 1,139 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளையில், இஸ்ரேல் ஹிஸ்புல்லா தாக்குதல் குறித்து, பிராந்திய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்தப் பதற்றத்தை உடனடியாக தடுக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.