ஆக்ரா: ஒற்றுமையில்லை என்றால் வங்கதேசத்தைப் போல் நாமும் தனித்து விடப்படுவோம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை கூறியுள்ளார்.
கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி உத்தரப் பிரதேசம் மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அந்தவகையில் ஆக்ராவில் துர்காதாஸ் ரத்தோரில் சிலை திறப்பு விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். அப்போது ஒற்றுமையில்லை என்றால் வங்கதேசத்தைப் போல் நாமும் தனித்து விடப்படுவோம் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவுரை கூறியுள்ளார்.
விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியது: “ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று நான் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவன் உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், வளத்தையும் நல்க பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கையில் பலமும், வளமும் சேரட்டும். நீங்கள் அனைவரும் தனித்தனியாக வளர்ந்த பாரதத்தை உருவாக்க உங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்
தேசத்தில் ஒற்றுமை வேண்டும். சகோதர, சகோதரிகளே ஒற்றுமையில்லாமல் எதுவும் செய்ய முடியாது. எதையும் சாதிக்கவும் முடியாது. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் தேசம் ஒற்றுமையாக இருக்கும். நாம் பிரிந்துகிடந்தால் நாம் தனித்துவிடப்படுவோம். வங்கதேசத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்கத்தானே செய்கிறீர்கள். அந்தத் தவறுகள் இங்கேயும் நடந்துவிடக் கூடாது” என்று யோகி ஆதித்யநாத் பேசினார்.
வங்கதேசத்தில் அரசு இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் நடத்திய போராட்டம் கலவரமாக உருவெடுத்தது. இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசினா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனை சுட்டிக்காட்டியே யோகி ஆதித்யநாத் ஒற்றுமையின் அவசியத்தைப் பற்றிப் பேசியுள்ளார். இது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.