கோபத்தில் ரிஸ்வானை நோக்கி பந்தை எறிந்த ஷகிப் … 2 தண்டனைகளை அறிவித்த ஐ.சி.சி.

துபாய்,

பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்தது. அதில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.

முன்னதாக இந்தப் போட்டியில் பாகிஸ்தானின் 2-வது இன்னிங்சில் அந்த அணி வீரர் முகமது ரிஸ்வான் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்ப்பதற்காக போராடிக் கொண்டிருந்தார். அப்போது வங்காளதேச வீரர் ஷகிப் அல் ஹசன் வீசிய ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ரிஸ்வான் 2வது பந்தை எதிர் கொள்வதற்கு முன் நடுவரிடம் தெரிவித்து விட்டு வங்காளதேச அணியின் பீல்டிங்கை பின்னாடி திரும்பி பார்த்தார்.

ஆனால் அதற்குள் ஷகிப் அல் ஹசன் பந்து வீச ஓடி வந்தார். அப்போது ரிஸ்வான் அதை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததால் கோபமடைந்த ஷகிப், தன்னுடைய கையில் இருந்த பந்தை முகமது ரிஸ்வானை நோக்கி வேகமாக வீசினார்.

நல்லவேளையாக ரிஸ்வான் மீது படாமல் மேலே சென்ற பந்தை விக்கெட் கீப்பர் பிடித்தார். நடுவர் “ஏன் இப்படி செய்தீர்கள்” என்று ஷகிப்பிடம் அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் அப்போட்டியில்,’பந்து அல்லது விளையாட்டு உபகரணத்தை மற்றவர் மீது வேண்டுமென்றே எறிந்தார்’ என்ற 2.9 விதிமுறையை ஷகிப் அல் ஹசன் மீறியதாக ஐசிசி அறிவித்துள்ளது. எனவே அதற்கு தண்டனையாக அப்போட்டியின் சம்பளத்திலிருந்து 10% அவருக்கு அபராதம் விதிக்கப்படுவதாகவும் ஐசிசி அறிவித்துள்ளது. அத்துடன் 1 கெரியர் கருப்பு புள்ளியும் அவருக்கு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.