Pakistan vs Bangladesh: பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக வென்று வங்கதேச அணி சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டின் 5வது நாளில் வங்காளதேசம் அணி 30 ரன்களை அடித்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணி மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி இருந்த நிலையில், 2வது இன்னிங்ஸில் மோசமாக விளையாடி தோல்வியை தழுவியது. இதன் மூலம் பங்களாதேஷ் அணி எளிதான வெற்றியை பதிவு செய்தது. அவர்களை 2வது இன்னிங்ஸில் வெறும் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி 10 விக்கெட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Bangladesh win the first Test by 10 wickets#PAKvBAN | #TestOnHai pic.twitter.com/436t7yBaQk
— Pakistan Cricket (@TheRealPCB) August 25, 2024
இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றியை பங்களாதேஷ் அணி பதிவு செய்துள்ளது. இதற்கு முன்பு இரண்டு அணிகளும் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் 12 போட்டியில் பாகிஸ்தான் அணிதான் வென்றுள்ளது, ஒரு போட்டி ட்ராவில் முடிந்தது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இதுவே முதல் முறை ஆகும். இது தவிர மேலும் ஒரு மோசமான சாதனையை பாகிஸ்தான் சொந்தமாக்கியுள்ளது. 400-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த போதிலும், ஒரு மைதானத்தில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி என்ற பெருமையையும் பெற்றுள்ளனர். இதற்கு முன் இதே போல 2022ம் ஆண்டு ராவல்பிண்டியில் பாகிஸ்தான் இங்கிலாந்திடம் முதல் இன்னிங்ஸில் 579 ரன்கள் எடுத்திருந்தாலும் தோல்வியடைந்தது.
முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான்
சவுத் ஷகீல் 141 ரன்கள், முகமது ரிஸ்வான் 171 ரன்கள் அடிக்க பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 448/6d குவித்தது. பாபர் அசாம் 0 ரன்களுக்கும், கேப்டன் மசூத் 6 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேறி இருந்தனர். பிறகு முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேசம் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 565 ரன்களை எடுத்தது. ஷத்மான் இஸ்லாம் 93, முஷ்பிகுர் ரஹீம் 191, மெஹிதி ஹசன் மிராஸ் 77 ரன்கள் அடிக்க வங்கதேசம் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் வங்காளதேச சுழற்பந்து வீச்சாளர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் சிறப்பாக பந்துவீச பாகிஸ்தான் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 30 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய வங்கதேசம் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
எங்களின் கணிப்பு தவறானது: ஷான் மசூத்
இந்த மோசமான தோல்வி குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத், அணியில் அதிக வேகப்பந்து வீச்சாளர்களை ஏன் எடுத்தோம் என்பதை விளக்கினார். “நாங்கள் ஆடுகளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவியை வழங்கும் என்று எதிர்பார்த்தோம். ஆடுகளமும் பார்ப்பதற்கு அப்படி தான் இருந்தது. எனவே 3 வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டு விளையாடினால் எளிதாக வென்று விடலாம் என்று நினைத்தோம். சுழற்பந்து வீச்சாளர்கள் தேவையில்லை என்று நினைத்தது நாங்கள் செய்த தவறு. 5 நாட்கள் வரை நீடிக்காது என்று தப்பு கணக்கு போட்டோம். அதனால் தான் டிக்ளேர் செய்தோம். எங்களுக்கு போதுமான ரன்கள் இருந்தது. ஆனால் பங்களாதேஷ் வீரர்கள் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடினர். முஷ்பிக் மற்றும் மிராஸ் நன்றாக பேட்டிங் செய்தனர்,” என்று மசூத் கூறினார்.