பாரிஸ்: டெலிகிராம் செயலியின் சிஇஓ பாவெல் துரோவ், கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கருத்து சுதந்திரத்தை பிரான்ஸ் நசுக்க முயற்சிப்பதாக டெக் துறையை சார்ந்து இயங்கி வருபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பாவெல் துரோவ் கைதுக்கான காரணம் என்ன? – டெலிகிராம் மூலம் நடைபெறும் சட்டவிரோத குற்ற செயல்களுக்கு அந்நிறுவனம் துணை போகிறது, குற்றவியல் நடவடிக்கையை கண்காணிக்க தவறியது மற்றும் பயனர்களின் தரவுகளை அரசிடமிருந்து பாதுகாக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பாவெல் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், ஐரோப்பாவின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்துக்கு இணங்க டெலிகிராம் செயல்பட்டு வருவதாக அந்நிறுவனம் எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது.
இந்நிலையில், எலான் மஸ்க் இது குறித்து அறிக்கை எதையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் பாவெல் துரோவ் குறித்து எக்ஸ் தளத்தில் அவர் ட்வீட் செய்துள்ளார். பாவெல் துரோவை வெளியிட வலியுறுத்தும் வகையில் #FreePavel என ட்வீட் செய்திருந்தார். அதில் பாவெல் பங்கேற்று நேர்காணல் வீடியோவை சேர்த்துள்ளார். ‘பிரான்ஸ் குற்றத்துக்கு ஆதரவானது. சுதந்திரத்துக்கு எதிரானது’ என பயனர் ஒரு ட்வீட் செய்திருந்தார். ‘சரியாக சொன்னீர்கள்’ என அதற்கு மஸ்க் பதில் கொடுத்துள்ளார்.
“துரோவ் கைது செய்யப்பட்டுள்ளது அடிப்படை மனித உரிமையான பேச்சு சுதந்திரம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல். பிரான்ஸ் அதிபர் மக்ரோனின் இந்தச் செயல் வருத்தம் அளிக்கிறது. இது பிரான்ஸை மட்டுமல்லாது உலகையே தாழ்த்தும் வகையில் அமைந்துள்ளது” என அமெரிக்காவின் எட்வர்ட் ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.
“இது டெலிகிராம் தளத்துக்கு மட்டும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் அல்ல, அனைத்து விதமான ஆன்லைன் தளத்துக்கும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல். துரோவ் கைது நடவடிக்கை பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்” என பாட்காஸ்ட் ஒருங்கிணைப்பாளர் லெக்ஸ் ஃப்ரிட்மேன் தெரிவித்துள்ளார்.