கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெரம்பலூர் எம்.பி. கே.என்.அருண்நேரு கடந்த இரு நாட்களாக நன்றி தெரிவித்து வருகிறார்.
குளித்தலை தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று (ஆக.26ம் தேதி) நன்றி தெரிவிக்க வந்த எம்.பி. கே.என்.அருண்நேருவுக்கு காக்காயம்பட்டியில் இளைஞர் அணி அமைப்பு சார்பிலும், பஞ்சப்பட்டி, வரகூர் பகுதியில் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பிலும் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. கொசூர், தொண்டாங்கிணம், போத்துராவுத்தன்பட்டி, இரும்பூதிப்பட்டி, பஞ்சப்பட்டி ஆகிய பகுதிகளிலும், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணமுத்தாம்பட்டி, கொமட்டேரி, வயலூர், வரகூர் ஆகிய பகுதிகளில் எம்.பி.,கே.என்.அருண்நேரு பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
கணக்குப்பிள்ளையூரில் நன்றி தெரிவிக்க வந்த அருண்நேருவிடம் அப்பகுதி மக்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சரியான முறையில் வேலை வழங்கவில்லை எனவும், தங்கள் பகுதிக்கு காவிரி குடிநீர் மற்றும் அடிப்படைகள் செய்து தர கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களிடம் அருண்நேரு தெரிவித்தது: “மகாத்மா காந்தி தேசிய ஊறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசு 45 நாட்கள் மட்டுமே வேலைகளை தற்போது வழங்குகிறது.
அதனை அதிகரித்து வழங்குமாறு மக்களவையில் வலியுறுத்தியுள்ளோம். புதிய குடிநீர் திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். ஒரு சில மாதங்களில் தங்கள் பகுதிக்கு காவிரி கூட்டு குடிநீர் வழங்கப்படும். கிராமப்பகுதிகளில் விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பினை உருவாக்கிட தேவையான அனைத்து முயற்சிகளும் எடுப்பேன்” என தெரிவித்தார்.
எம்.பி. அருண்நேரு நன்றி தெரிவிக்க சென்ற பல்வேறு இடங்களில் மக்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், காவிரி குடிநீர், அடிப்படை வசதிகளை கேட்டு அவரிடம் கோரிக்கை வைத்தனர். குளித்தலை எம்எல்ஏ ரா.மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் கரிகாலன், கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் கதிரவன், இளைஞர் அணி அமைப்பைச் சேர்ந்த அருள், ஊராட்சி மன்றத்தலைவர் அன்பரசு (போத்துராவுத்தன்பட்டி), ராமசாமி (வீரியபாளையம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்