மலையாள திரையுலகை அதிரவைத்த நிகழ்வுகளில் ஒன்று ஹேமா கமிட்டியின் அறிக்கை. மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாவதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிரபல நடிகை முனு முனீர் பிரபல தனது சக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் பதிவில், “நான் திரைத்துறையில் இயங்கிக்கொண்டிருக்கும் போது வாய்மொழியாகவும், உடல் ரீதியாகவும் பல தொல்லைகளை அனுபவித்திருக்கிறேன். என்னை இந்த வகையில் தொல்லை செய்தவர்களின் பெயர் பட்டியல்…
1. நடிகரும், எம்.எல்.ஏ-வுமான முகேஷ்
2. நடிகர் மணியன் பிள்ளை ராஜு
3. நடிகர் இடவேல பாபு
4. நடிகர் ஜெயசூர்யா
5. Adv சந்திரசேகரன்
6. ப்ரொடக்ஷன் கன்ட்ரோலர் நோபல் மற்றும் விச்சு ஆகியோர்.
2013-ம் ஆண்டில், ஒரு திரைப்பட திட்டத்தில் பணிபுரியும் போது, இந்த நபர்களால் நான் உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு ஆளானேன். அதையும் கடந்து நான் தொடர்ந்து வேலை செய்ய முயற்சித்தேன். ஆனால் அவர்களின் தொடர் தொல்லை தாங்கமுடியவில்லை. அதனால்தான் நான் மலையாள திரையுலகத்தை விட்டு வெளியேறி சென்னைக்கு இடம் பெயர்ந்தேன்.
கேரள கௌமுதியில் `மினு லெஃப்ட் மலையாள இண்டஸ்ட்ரி’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இந்த சம்பவத்துக்கு எதிராக குரல் கொடுத்தேன். நான் அனுபவித்த துன்பங்களுக்கு இப்போதும் நீதியையும், பொறுப்புக்கூறலையும் எதிர்பார்க்கிறேன். அவர்களின் கொடூரமான செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உங்கள் உதவியை நாடுகிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.