மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர், பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொல்லப்பட்டிருப்பது, தேசத்தையே மீண்டும் ஒருமுறை தலைகுனிய வைத்திருக் கிறது. மருத்துவருக்கே இந்நிலையெனில், மற்ற துறைகள், ஒழுங்கமைக்கப்படாத பணிகளில் உள்ள பெண்களின் பாதுகாப்பு பெரிய கேள்விக்குறியாக நம்முன் நிற்கிறது.
ஒருபக்கம் பெண் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டங்கள் முதல் பணிபுரியும் பெண்களுக்கான அரசு விடுதிகள் வரை மத்திய, மாநில அரசுகள் கொண்டுவந்துள்ளன. ஆனாலும், இவை எதுவுமே பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை மாற்றவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
புள்ளி விவரங்களை கையில் வைத்துக்கொண்டு உற்று நோக்கினால்… பெண் களுக்குப் பாதுகாப்பான இடம் என்பது இந்திய திருநாட்டின் வரைபடத்தில் எந்த மூலையிலும் இல்லை. வீடு, பேருந்து, ரயில், பணியிடம், சாலை என எல்லா இடங் களிலும் இந்த நிமிடத்தில்கூட பல பெண்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.
நமது எதிர்வினைகள் எல்லாம், நிகழும் சம்பவங்களுக்குத்தான். நம் பாதுகாப்பு வழிமுறைகள் எல்லாம், நெருப்பை அணைக்க உதவும் தீயணைப்பான் போலத்தான். ஆனால், அறியப்பட வேண்டியதும் அகற்றப்பட வேண்டியதும் இவற்றுக்கான மூலக் காரணத்தை. அது, ஆணாதிக்க பாலியல் மனநிலை. `பெண்கள் வலிமையற்றவர்கள், இவர்கள் எம் இரைகள்’ உள்ளிட்ட ஆண்களின் வக்கிர மனநிலைதான், எல்லா இடங்களிலும் பெண்களைத் துரத்திக்கொண்டே இருக்கிறது. இதை வேரறுப்பதுதான், அடிப்படையான தீர்வு.
குறிப்பாக, படிப்பு, வேலை எனப் பெண்கள் முன்னைவிட இப்போது மிக அதிக மாக வெளிவரத் தொடங்கியிருக்கும் இந்தக் காலச் சூழலில், இன்னொரு பக்கம் கஞ்சா, போதை உள்ளிட்ட பழக்கங்களால் சமூகக் குற்றவாளிகள் அதிகரித்து வரு கிறார்கள். இந்த அபாயத்தை உணர்ந்து, மத்திய, மாநில அரசுகள், சட்டம், காவல் துறை மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அப்படி எடுக்கப்பட்டி ருந்தால், தேசத்தில் பாதுகாப்பான இடம் எங்கே? என்கிற கேள்வியே எழுந்திருக்காது.
இதில் நம் பங்கு என்ன தோழிகளே?! வீடோ, வீதியோ, நாடோ… பாலியல் வன்முறைகள் நடக்கும்போதெல்லாம், பெண்களையே குற்றவாளியாக்கும் அநீதியை தீயிட்டுக் கொளுத்தி, ஆண்களின் வக்கிரத்தை கடுமையாக எதிர்ப்போம். அவர்களை தலைகுனிய வைக்கும் குரல்களை, முழக்கங்களை, போராட்டங்களைத் தொடர்ந்து தீமூட்டுவோம். அது, வேலை பறிபோகும், உறவுகளால் கைவிடப்படும், ஊரால் புறக்கணிக்கப்படும் அச்சத்தை, அவமான உணர்வை எச்சரிக்கை மணியாக ஆண் சமூகத்தின் மனதில் ஆழமாகப் பதியவைக்க வேண்டும்.
சட்ட தண்டனையுடன் சமூக தண்டனையும் சேர்த்து வழங்கி, பாலியல் குற்றங்களை முற்றாக ஒழிக்க முற்படுவோம் தோழிகளே!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்