ஆகஸ்ட் 25 இரவு 11.30 மணி நிலவரப்படி தெற்கு – தென்கிழக்கு சிட்டோர்கரின் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுந்த தாழ்வுநிலையானது மேலும் மேற்கு – தென் மேற்கு நோக்கி நகர்ந்து தெற்கு ராஜஸ்தான், குஜராத், சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் மழையை ஏற்படுத்தும். ஆகஸ்ட் 29 ஆம் தேதி பாகிஸ்தானை நோக்கி நகரும் என்று இன்று அதிகாலை 2 மணியளவில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்: மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (ஆக.26) முதல் ஆக.29 வரை தெற்கு, கிழக்கு ராஜஸ்தான், குஜராத், சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கொங்கன் பகுதிகள், கோவா, ஒடிசா, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் பகுதிகளிலில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் இன்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் தெற்கு ராஜஸ்தானில் இன்றும், நாளையும் (ஆக.26, 27) மணிக்கு 60 கிமீ வேக பலத்த காற்றுடன் மழை பெய்யும்.
குஜராத் கடலோரப்பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். பாகிஸ்தான், வடக்கு மகாராஷ்டிராவிலும் ஆக.30 வரை கடல் சீற்றம் நிலவும். எனவே மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா மற்றும் பாகிஸ்தான் ஒட்டிய கடல் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்கள் நீர்நிலைகளுக்குச் செல்வதைத் தவிர்க்கும்படியும், பயணங்களுக்கு முன்னர் போக்குவரத்து எச்சரிக்கைகளை கவனிக்கவும் ஐஎம்டி அறிவுறுத்தியுள்ளது. மழைவாய்ப்பு பகுதிகளில் உள்ள விவசாயிகள் வேளாண் நிலங்களில் முறையான வடிகாலை ஏற்படுத்தி பயிர்ச்சேதத்தை தவிர்க்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர்.
மேலே குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் குறிப்பாக நகர்ப்புறங்களில் ஆங்காங்கே திடீர் வெள்ளம், அதனால் சாலைகள் மூடல், தண்ணீர் தேங்குதல் போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. தோட்டப்பயிர்களுக்கு சேதம், நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.