நேற்று (ஆகஸ்ட் 25) விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘நீயா நானா’வில் ‘படித்துக் கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்/ குடும்பத்தினர்” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்களும், அவர்களின் பெற்றோர்களும் தங்களது கண்ணீர் கதைகளைப் பேசியிருந்தனர். படித்துக் கொண்டே வயதிற்கு மீறி உழைக்கும் சிறுவர்களின் வாழ்க்கைக் கதைகள் பார்ப்போரின் மனதை உருக்கச் செய்தது.
இதில் கோவில்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் என்ற சிறுவன் பள்ளி நேரம்போக மீத நேரங்களில் பழ மூட்டைகளைத் தூக்கும் வேலை செய்து, தனது பெற்றோருக்கு உதவுவதாகப் பேசிய காணொலி சமூகவலைத்தளங்களில் வைரலாகியிருந்தது. “பள்ளி மற்றும் வேலையை முடித்தபின் 3 கிலோ மீட்டர் வீட்டிற்கு நடந்தே செல்வேன். அம்மாவிற்கு எலும்புத் தேய்மான பிரச்னை. அவருக்கு ஒரு நல்ல மெத்தை வாங்கித் தர வேண்டும். அப்பாவின் கஷ்டத்தைக் குறைக்க உதவ வேண்டும்.” என்று அந்தச் சிறுவன் பேசியிருந்தார். சமூகவலைத்தளங்களில் பலரும் இது குறித்துப் பதிவிட்டு, அந்தச் சிறுவனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தக் காணொலியைக் கண்ட இசையமைப்பாளர் தமன், “நான் இந்தச் சிறுவனுக்கு ஒரு இரு சக்கர வாகனம் வாங்கித் தந்து உதவுகிறேன். நிச்சயம் இந்தச் சிறுவன் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வந்து அம்மாவை மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வான்.” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினர் அந்தச் சிறுவனின் குடும்பத்திற்கு உதவி செய்துள்ளனர். இதுகுறித்த காணொலியில் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்த அச்சிறுவனின் அம்மா, “எங்களது காணொலியைப் பார்த்து உடனே உதவிய விஜய் அவர்களுக்கு நன்றி. விஜய்யின் சார்ப்பாக எங்களிடம் நலம் விசாரித்துப் பேசிய புஸ்ஸி ஆனந்த் அண்ணனுக்கும் நன்றி. ‘தமிழக வெற்றிக் கழகம்’ கோவில்பட்டி சட்டமன்ற நிர்வாகிகளுக்கு நன்றி. தேவையான ஒரு மாத மளிகை மற்றும் காய்கறிகள், மெத்தை, ரூ.25,000 பணம் மற்றும் என் மகனின் பள்ளி, கல்லூரி படிப்புச் செலவை ஏற்பதாகக் கூறியுள்ளனர். விஜய் சாருக்கும் ரொம்ப நன்றி.” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
இதுதொடர்பான காணொலி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரமேஷ் மட்டுமல்ல இதுபோல படித்துக் கொண்டே வேலை செய்யும் சிறுவர்கள் அனைவரும் வறுமையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, நிம்மதியாகப் படிக்கும் சூழலை உருவாக்கும் பொறுப்பு அரசிற்கு இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.