`கல்விக்கு நிதி வேண்டுமென்றால் தேசிய கல்விக் கொள்கை நிபந்தனையா?' – மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநில பள்ளி கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்குவதாகவும், அதேசமயம் மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒப்புக்கொண்ட தமிழக அரசு மும்மொழி கொள்கை காரணமாக அதற்கு கையெழுத்திடவில்லை எனக் கூறியிருந்தார். மேலும், முதல்வரின் குடும்பம் நடத்தக்கூடிய பள்ளியில் மும்மொழி இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

அண்ணாமலை

இந்த நிலையில், `சமக்ரா சிக்ஷா’ திட்டத்தின்கீழ் பள்ளி கல்விக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க தேசிய கல்விக் கொள்கை நிபந்தனையாக வைக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டி, நிதியை உடனடியாக ஒதுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில், “தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில், சமக்ரா சிக்ஷா ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் வழங்கப்பட வேண்டிய முதல் தவணை நிதி விடுவிக்கப்படவில்லை. நாட்டின் கல்வித் துறையில், ஒன்றிய அரசின் நிதியுதவியோடு செயல்படுத்தப்படும் முதன்மையான திட்டம் இது என்பதால், முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் திட்டத்தின்கீழ் உரிய நேரத்தில் நிதியை விடுவிப்பது மிகவும் அவசியம்.

ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர்களுக்கான ஊதியம் மற்றும் கல்வியின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகள் போன்றவற்றிற்குத் திட்ட ஒப்புதல் வாரியத்தின் (Project Approval Board) ஒப்புதலுக்கு உட்பட்டு நிதி விடுவிக்கப்படுகிறது. அதன்படி, 2024-2025 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டுக்கு ரூ.3,586 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி (60 விழுக்காடு). ஒன்றிய அரசின் அந்த பங்களிப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக முன்மொழிவுகள் ஏப்ரல் 2024-லேயே சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், முதல் தவணையான ரூ.573 கோடி விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின்

இதுதவிர, முந்தைய ஆண்டுக்கான ரூ.249 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இதற்கு முன்பும், தமிழ்நாட்டுக்கு நிதி விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதிய பின்னரே, நிலுவையிலுள்ள நிதியில் ஒரு பகுதி கடந்த நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஒன்றிய அமைச்சரைச் சந்தித்து, உரிய நேரத்தில் மானியங்களை விடுவிக்கக் கோரி ஜூலை மாதம் கோரிக்கை வைத்த நிலையிலும், இதுவரை சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு மானியம் விடுவிக்கப்படவில்லை.

சமீபத்தில், பி.எம்.ஸ்ரீ (PM SHRI) பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முழுமையாக அமல்படுத்துவதை, தற்போதைய சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதியை அனுமதிப்பதற்கான முன்நிபந்தனையாக இணைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பது தெரிய வந்துள்ளது. அதில், புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கை 2020-ல் உள்ள குறிப்பிட்ட சில விதிகள் ஏற்புடையதாக இல்லை என்றும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் சேர புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறைந்தபட்ச மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கை இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

மோடி

பிராந்திய அடிப்படையில் சமூக- பொருளாதார நிலைமைகள், உள்கட்டமைப்பு வசதிகள், நிதி ஆதாரங்கள் போன்றவற்றில் வேறுபாடுகள் இருக்கும் நிலையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலில் இடம் பெற்றுள்ள கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்களைப் பாதிக்கும் கொள்கைகளை அமல்படுத்தும் போது, அதில் ஒவ்வொரு மாநிலத்தின் நியாயமான கருத்தும் உள்ளடங்கி இருக்க வேண்டும். சமக்ரா சிக்ஷா என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிதியினை நிறுத்தி வைக்கும் ஒன்றிய அரசின் தற்போதைய நடவடிக்கை, பின்தங்கிய நிலையில் வாழும் லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் ஆசிரியர்களை நேரடியாகப் பாதிக்கும்.

ஸ்டாலின், மோடி

இத்தகைய நடவடிக்கை சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நோக்கமான `எந்தவொரு குழந்தைக்கும் கல்வி வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது’ என்பதற்கு எதிரானது. எனவே, சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவித்திட தாங்கள் இதில் நேரடியாகத் தலையிட வேண்டும். அதோடு, விவாதங்கள் தேவைப்படும் ஒரு கொள்கையினை கல்விக்கான நிதி வழங்கிடும் விஷயத்துடன் பொருத்திடக் கூடாது” என்று மோடிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.