மும்பை: மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்த அதே இடத்தில் மிகப் பெரிய சிலையை மாநில அரசு நிறுவ உள்ளது என மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
சிந்துதுர்க் மாவட்டம், மால்வான் தாலுகாவில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று (டிசம்பர் 4) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட 17-ஆம் நூற்றாண்டின் மராட்டிய பேரரசர் சிவாஜியின் 35 அடி உயர சிலை நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அதே இடத்தில் சிவாஜிக்கு மிகப் பெரிய சிலை மாநில அரசு சார்பில் அமைக்கப்படும் என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தேவேந்திர ஃபட்னாவிஸ், “இடிந்த சிவாஜியின் சிலை மாநில அரசால் நிறுவப்பட்டது அல்ல. சிலையின் கட்டுமானத்தை மேற்பார்வையிட்டது கடற்படை. காற்றின் வேகத்தைத் தாங்கவல்லதாக அமைக்க வேண்டும் என்பது போன்ற முக்கியமான காரணிகளை சிலையை உருவாக்குவதற்கும் நிறுவுவதற்கும் பொறுப்பான நபர்கள் கவனிக்காமல் இருந்திருக்கலாம். பயன்படுத்தப்பட்ட இரும்பின் தரம், கடல் காற்றின் தாக்கம் ஆகியவற்றால் சிலை துருப்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
சிலையை உருவாக்குவதற்கு முன்பு இந்த அனைத்து அம்சங்களையும் சிலை தயாரிப்பாளர்கள் புரிந்து கொண்டார்களா என்பது இப்போது கேள்வியாக உள்ளது. அதே இடத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெரிய சிலையை உருவாக்க நாங்கள் உறுதிகொண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், சிலை உடைந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் அவர் கூறினார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சத்ரபதி சிவாஜியின் சிலை அவசர அவசரமாக நிறுவப்பட்டதே விபத்துக்குக் காரணம் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த ஃபட்னாவிஸ், “சிலை உடைப்பு வேதனை அளிக்கிறது. இதில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு அருவருப்பானது. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை” என தெரிவித்தார்.
முன்னதாக, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்தது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஏக்னாத் ஷிண்டே, மணிக்கு 45 கிமீ வேகத்தில் காற்று வீசியதால் இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது என கூறினார். மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் ரவீந்திர சவான் கூறுகையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் சிலையில் துரு இருப்பதைக் கண்டுபிடித்து கடற்படைக்கு கடிதம் எழுதியுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதனிடையே, ஒப்பந்ததாரர் ஜெய்தீப் ஆப்தே மற்றும் கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் ஆகியோர் மீது உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.