சென்னை: தனியார் மய அரசாணைகளை திரும்பப்பெற கோரி மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தனியார் மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, சென்னையில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகங்களில் தூய்மைப் பணி உள்ளிட்ட இதரப் பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தமிழக ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை சம்மேளனம் (சிஐடியு) சார்பில் சென்னை எழும்பூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.கணேசன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஆர்.பாலசுப்பிரமணியன், பொருளாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் கலந்துக் கொண்டு, தினக்கூலி ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களையும், உள்ளாட்சி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோஷமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ஆர்.கணேசன், “மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர தூய்மைப் பணி உள்பட இதர பணிகளில் பணிபுரியும் ஊழியர்களை தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் எடுத்து, தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பிரிவு தொழிலாளர்களுக்கும் குறைந்தப்பட்ச ஊதியத்தை வழங்கும் அரசாணையை அமலாக்கக் வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அதற்கேற்ப பஞ்சப்படி, விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு ஊதிய உயர்வு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். மேலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சியின் அனைத்துப் பிரிவு தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று கே.ஆர்.கணேசன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.