புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் பாரத் ராஷ்ட்ர சமிதி மூத்த தலைவர் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
சிறையிலிருந்து வெளியே வந்த அவரை பாரத் ராஷ்ட்ர சமிதி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். வெளியே வரும்போது அவர் தனது கையை உயர்த்தி ‘ஜெய் தெலங்கானா’ என முழக்கமிட்டார்.
பின்னர் சிறைக்கு வெளியே தொண்டர்களுடன் காத்துக் கொண்டிருந்த தனது கணவர் மற்றும் மகனை கண்கலங்கியபடி ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினார். அவர்களுடன் கவிதாவின் சகோதரரும், பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவருமான கே.டி.ராமா ராவும் இருந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, “உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. 5 மாதங்களுக்குப் பிறகு என்னுடைய கணவர், என் சகோதரர், என் மகன் ஆகியோரை பார்த்ததும் நான் உணர்ச்சிவசப்பட்டேன். இந்த நிலைக்கு அரசியல் மட்டுமே காரணம். அரசியலால்தான் நான் சிறையில் அடைக்கப்பட்டேன் என்பதை நாடே அறியும். நான் எந்த தவறும் செய்யவில்லை. தொடர்ந்து சட்டரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் போராடுவேன்” என்றார்.
#WATCH | Delhi: BRS leader K Kavitha released from Tihar Jail after she was granted bail in the Delhi excise policy case by the Supreme Court today. pic.twitter.com/miMUkSSlm0
— ANI (@ANI) August 27, 2024
முன்னதாக, டெல்லி அரசின் மதுபான கொள்கை மாற்றி அமைக்கப்பட்டதில் பல்வேறு நிதி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை வழக்குப் பதிவு செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், அமைச்சர் மணிஷ் சிசோடியா, பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா உள்ளிட்டோரை கைது செய்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று கவிதாவின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாதன் அடங்கிய அமர்வு, சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகிய இரண்டின் வழக்குகளிலும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.