நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நாட்டரிசி ஒரு கிலோக்கிராமிற்கு 105/- ரூபாய்களும், சம்பா நெல் ஒரு கிலோக்கிராமிற்கு 115/- ரூபாய்களும், கீரி சம்பா நெல் ஒரு கிலோக்கிராமிற்கு 130/- ரூபாய்களுமாக கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நெல் கொள்வனவின் போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்து வரும் பெரும் போகத்தில் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர்ந்து வரும் பெரும்போகச் செய்கையில் உயரிய நெல் அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் நெற் செய்கைக்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக தற்போது ஒரு ஹெக்ரயாருக்கு வழங்கப்படுகின்ற 15,000/- உர மானியத்தை, ஹெக்ரயார் ஒன்றுக்கு 25,000/- ரூபா வரை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
06. நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்வனவு செய்தல் – 2024 சிறுபோகம்
2024 சிறுபோகச் செய்கையின் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சிறுபோகச் செய்கையின் நெல் அறுவடையைக் கொள்வனவு செய்வதற்காக சலுகை வட்டி வீதத்தின் அடிப்படையில் வணிக வங்கிகள் ஊடாக உயர்ந்தபட்சம் 6,000 மில்லியன் ரூபாய்கள் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு கடனை வழங்குவதற்காக ஏற்கனவே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நெல் கொள்வனவின் போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் தொடர்ந்து வரும் பெரும் போகத்தில் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் கௌரவ ஜனாதிபதி அவர்களும், விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• 2024 சிறுபோகச் செய்கையின் நெல் அறுவடையை அரசு கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தில் பங்கெடுப்பதற்கு இயலுமாகும் வகையில் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு 500 மில்லியன் ரூபாய்கள் நிதியொதுக்கீடு செய்தல்.
• நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நாட்டரிசி ஒரு கிலோக்கிராமிற்கு 105/- ரூபாய்களும், சம்பா நெல் ஒரு கிலோக்கிராமிற்கு 115/- ரூபாய்களும், கீரி சம்பா நெல் ஒரு கிலோக்கிராமிற்கு 130/- ரூபாய்களுமாக கொள்வனவ செய்தல்,
• தொடர்ந்து வரும் பெரும்போகச் செய்கையில் உயரிய நெல் அறுவடையைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் நெற் செய்கைக்கு விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக தற்போது ஒரு ஹெக்ரயாருக்கு வழங்கப்படுகின்ற 15,000/- உர மானியத்தை, ஹெக்ரயார் ஒன்றுக்க 25,000ஃ- ரூபா வரை அதிகரித்தல்.