புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்

புதுச்சேரி: புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் முன் அறிவிப்பின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றியதாக கூறி அதிகாரிகளுடன் சாலையோர வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதுவை நகரப் பகுதியில் பிரதான சாலைகளில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் புதுவையில் கடும் போக்குவரத்து நெரிசல் எற்படுகிறது. சாலைகளின் இருபுறங்களிலும் புதிது புதிதாக கடைகள் முளைக்கின்றன. இதுதொடர்பாக தொடர்ச்சியாக புகார்களும் வருவதால் அவ்வப்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டும் வருகிறது. இந்த நிலையில் இன்று (ஆக.27) கிழக்கு கடற்கரை சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

கொக்கு பார்க் பகுதியில் இருந்து பொதுப்பணித்துறை மற்றும் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் போலீஸார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதற்கு வியாபாரிகள் ஒன்றுகூடி எதிர்ப்பு தெரிவித்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூடாது என அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆக்கிரமிப்பை அகற்றி வருவது ஏன் எனவும் வியாபாரிகள் கேள்விகளை எழுப்பினர். இருப்பினும் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்பு முன்னிலையில் பொக்லைன் இயந்திர உதவியுடனும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

இதற்கு ஏஐடியுசி தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர சேதுசெல்வம், “புதுச்சேரி தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரம் மற்றும் தெருவோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்துதல்) விதிகள், 2017 மற்றும் தெருவோர வியாபாரிகள் (வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் தெருவோர விற்பனையை ஒழுங்குபடுத்தல்) சட்டம் 2014 (மத்திய சட்டம் 7-2014)-ன் படி, உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும், சாலையோரங்களில் வியாபாரம் செய்யக்கூடியவர்களை நகராட்சி நிர்வாகம் கணக்கெடுப்பு செய்து, இடஒதுக்கீட்டுச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,

இந்த நிலையில் இன்று உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சாலையோர கடைகளை, பொதுப்பணித் துறையும், உழவர்கரை நகராட்சி நிர்வாகமும் சாலையோர கடைகளை உடைத்து நொறுக்கி அப்புறப்படுத்தி வருகிறார்கள். சாலையோர வியாபாரிகளை பாதுகாத்தல் சட்டத்தின்படி கடை வைத்துக்கொள்ள இடஒதுக்கீட்டு ஆணை அடையாள அட்டையை கொடுத்துவிட்டு, அராஜகமான முறையில் கடைகளை அப்புறப்படுத்துவதை கண்டிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.