கொல்கத்தா: நபன்னா அபிஜான் பேரணியில் அமைதியான முறையில் பங்கேற்றவர்கள் மீது போலீஸ் மிருகத்தனமான தாக்குதலை நிகழ்த்தியுள்ளது என்று மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், நகர நிர்வாகம் இந்த மிருகத்தனமான தாக்குதலை நிறுத்தாவிட்டால் மேற்கு வங்கத்தை முடக்குவோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்தத் தலைவர் சுவேந்து, “சந்த்ராகச்சியில் அமைதியாக போராடியவர்கள் மீது போலீஸார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தியுள்ளனர்; ஹவுரா பாலத்தில் போராடிய மாணவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டை வீசியுள்ளனர். கல்லூரி சாலையில் போலீஸார் தடியடி நடத்தியுள்ளனர். தயவுசெய்து இந்த மிருகத்தனத்தை நிறுத்துங்கள்.
போலீஸார் தங்களது அடக்குமுறையை நிறுத்தாவிட்டால், நாளை நாங்கள் (பாஜக) மேற்கு வங்கத்தை முடக்குவோம். இந்த நிர்வாகத்தால் ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காயமடைந்துள்ளனர். போலீஸ் கமிஷனர் வினீத் கோயல் மற்றும் டிஜிபி ஆகியோர் இந்த மிருகத்தனத்தை நிறுத்தாவிட்டால், நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
நான் சட்டத்தை மீற விரும்பாததால் பேலூர் மடத்துக்கு செல்லும் வழியில் ஹவுரா நிலையத்துக்குச் செல்கிறேன். எங்களை முன்னணியில் வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் நாங்கள் மாணவர் சமூதாயத்துடன் இணையவில்லை. ஆனாலும், அவர்களுடன்தான் நிற்கிறோம். அமைதியான முறையில் நீதி கேட்டு சாலைகளில் வந்த மாணவர்களை அடக்க 8,000 போலீஸார்களை கொல்கத்தா போலீஸார் நிலைநிறுத்தியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இதனிடையே, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய மம்தா பானர்ஜி பதவி விலகவேண்டும் என்று கோரி நடத்தப்படும் இந்த அரசியல் சார்பில்லாத பேரணியில் பாஜக தலைவர்களோ மற்றும் எந்த அரசியல் கட்சித் தலைவர்களோ முன்னணியில் இருக்க மாட்டார்கள் என்று பேரணியை ஏற்பாடு செய்திருந்த சத்ரா சமாஜ் இயக்கத்தினர் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, மேற்கு வங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த மாணவர்கள் பேரணியில் போராட்டக்காரர்கள் போலீஸாரை நோக்கி கற்களை வீசியதாலும், ஹவுரா பாலத்தில் உள்ள தடுப்புகளை உடைத்ததாலும் பரபரப்பு ஏற்பட்டது. தலைமைச் செயலகம் நோக்கி பேரணி சென்றவர்களைக் கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டு வீசி, தடியடி நடத்தினர்.
பின்புலம்: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரவுப் பணியில் இருந்த முதுநிலை 2-ம் ஆண்டு பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9-ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இந்த பாலியல் வன்கொடுமைக் கொலை வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில், பெண் மருத்துவரின் கொலைக்குப் பொறுப்பேற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பு தலைமைச் செயலகம் நோக்கிச் செல்லும் பேரணியை இன்று மேற்கொண்டது. இதில், வன்முறை நடக்க வாய்ப்பு உள்ளது என உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டிருந்தனர். தலைமைச் செயலகத்தைச் சுற்றி மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.