சென்னை: “அண்ணாமலையைப் பொறுத்தவரை அவருடைய நிலைப்பாடு என்னவென்றால், அவர் ஒரு மாநிலத் தலைவரே இல்லை. அவர் பாஜக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு ஒரு மேனேஜர். இந்த மேனேஜர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுகிறார். தேர்தல் காலத்தில், முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு ரகசிய கூட்டணி என்று கூறியபோது, அதை எந்த காலத்திலும் அண்ணாமலை மறுக்கவில்லை. மாறாக, இன்றைக்கு பாஜகவும் திமுகவும் ரகசிய கூட்டணியில் உள்ளனர்,” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் இபிஎஸ் குறித்த அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அழிவை நோக்கி அண்ணாமலை போகிறார் என்பதற்கான எடுத்துக்காட்டாகத்தான் அவருடைய பேச்சு இருந்தது. ஒரு தரம் தாழ்ந்த பேச்சு. லாயக்கில்லாத ஒரு மாநிலத் தலைவரைத்தான் பாஜக பெற்றிருப்பது வருந்ததக்க, வேதனையான விஷயம்.
பொதுவாகவே, அரசியலில் கருத்து மாற்றங்கள் இருக்கலாம். விமர்சனங்கள் இருக்கலாம். அந்த விமர்சனங்கள் ஒரு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து அண்ணாமலை அன்று, அதிமுக பொதுச் செயலாளரை கடுமையாக விமர்சனம் செய்தது மட்டுமின்றி, அதிமுகவை விமர்சனம் செய்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
அண்ணாமலையைப் பொறுத்தவரை அவருடைய நிலைப்பாடு என்னவென்றால், அவர் ஒரு மாநிலத் தலைவரே இல்லை. அவர் பாஜக என்ற கார்ப்பரேட் கம்பெனிக்கு ஒரு மேனேஜர். இந்த மேனேஜர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆட்டத்துக்கெல்லாம் ஆடுகிறார். தேர்தல் காலத்தில், முதல்வர் ஸ்டாலின் பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரு ரகசிய கூட்டணி என்று கூறியபோது, அதை எந்தக் காலத்திலும் அண்ணாமலை மறுக்கவில்லை.
மாறாக, இன்றைக்கு பாஜகவும் திமுகவும் ரகசிய கூட்டணியில் உள்ளனர். இரண்டு கார்ப்பரேட் கம்பெனிகளும் ஒன்றாகி ரகசிய கூட்டணி அமைத்து அது பெரிய அளவுக்கு விவாதப் பொருளானது. இதனால், முதல்வர் ஸ்டாலின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அந்த மேடையை அண்ணாமலை அநாகரிகமாக பயன்படுத்தி உள்ளார். அண்ணாமலையின் தகுதி என்ன? அவர் ஒரு மூன்றாண்டு காலமாகத்தான் அரசியலில் இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமி பல்வேறு பொறுப்புகளை வகித்து முதல்வராக வந்தவர். அண்ணாமலையின் நிலையே ஒரு விட்டில் பூச்சி போன்றது. அதன் வாழ்க்கையே 7 நாட்கள்தான். இந்த அளவுதான் அவருடைய அரசியல் நிலை இருக்கிறது. ஆனால், இதை மறந்துவிட்டு, ஒரு பாரம்பரியமிக்க 31 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சியை, 2026-ல் ஆட்சி அமைக்கவிருக்கிற ஒரு மாபெரும் இயக்கத்தை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு யோக்கியதை இருக்கிறதா? தகுதி இருக்கிறதா? திராவிட இயக்கங்களில் ஒன்றாக இருக்கக்கூடிய அதிமுகவை அண்ணாமலையால் எதுவும் செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.