சென்னை: முதலீட்டாளர்களிடம் ரூ.24.50 கோடி வசூலித்து மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24 கோடியே 50 லட்சம் மோசடி செய்ததாக அந்நிறுவனத்தின் இயக்குநரான தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 3 பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த மூன்று பேரையும் 10 நாட்கள் தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சென்னை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செயதிருந்தனர்.
அதில், இந்த வழக்கில் யார், யாருக்கு நிதி சென்றுள்ளது என்பது குறித்தும், எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும் விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே மூவரையும் 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும், எனக் கோரியிருந்தனர்.
இந்த மனு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர் வாலன்டினா முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் உள்ளிட்ட மூவரும் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் மூவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாருக்கு அனுமதியளித்துள்ள நீதிபதி, செப்.3-ம் தேதி மாலை 4 மணிக்கு மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.