தம்புள்ளை, சீகிரியா அரை நகர்ப்புற 12 கிராம சேவகர் பிரிவுகள், வனவிலங்கு வலயங்களாக வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டமையினால் 40 வருடங்களாக தீர்க்கப்படாது காணப்பட்ட சமூக பொருளாதாரப் பிரச்சினை தீர்க்கப்பட்டு மக்களுக்கு சுதந்திரமாக காணிகளை அனுபவிக்கும் உரிமையை வழங்க முடிந்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் பொறியியலாளர் நாலக பண்டார கோட்டேகொட வின் தலையீட்டினால் இலங்கைப் பாராளுமன்ற சுற்றாடல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான செயற்குழு கடந்த வாரத்தில் இது தொடர்பாக ஆராய்ந்துள்ளது.
அதன்படி அங்குள்ள காணிகளை படிப்படியாக விடுவிப்பதற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபர் தேஜானி திலகரத்ன, தம்புள்ளை பிரதேச செயலாளர் பியல் ஜயசூரிய, வன ஜீவராசிகள் திணைக்களம் மற்றும் அமைச்சு, தொல்பொருளியல் திணைக்களம் உட்பட பல நிறுவனங்கள், சீகிரியா பிரதேச சிவில் அமைப்புக்கள் எனப் பலர் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.