படப்பிடிப்புத் தளத்தில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை வெளியானதிலிருந்து மலையாள சினிமா உலகமே அதிரும் அளவுக்குப் புகார்கள் பரபரக்கின்றன. சினிமா வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளுவது போன்றவை நடப்பதாகவும், போதையில் அத்துமீறும் நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் குறித்து நடிகைகள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர். மேற்கு வங்க நடிகை ஸ்ரீலேகா மித்திரா கூறிய பாலியல் புகாரால், சினிமா அகாடமி தலைவர் ரஞ்சித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மற்றொரு இளம் நடிகை பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து மலையாள சினிமா கலைஞர்கள் சங்கமான AMMA அமைப்பின் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் நடிகர் ரஞ்சித். மேலும், நடிகர்கள் தங்களிடம் பாலியல்ரீதியாக அத்துமீறியதாக நடிகைகள் புகார் கூறினர். இளம் நடிகைக்கு 18 வயது பூர்தியாகும் முன்பே பாலியல் தொல்லைகள் செய்ததாக நடிகைகள் வெளிப்படுத்தியதால், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அரசு தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க தயங்குவதன் காரணம் என்னவென்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் விமர்சித்தது. இதையடுத்து நடிகைகளின் பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க போலீஸ் அதிகாரிகள் குழுவை ஏற்படுத்தியுள்ளது கேரள அரசு. இது ஒருபுறம் இருக்க நடிகைகளுக்கு ஏற்பட்டுள்ள பாலியல் அத்துமீறல்கள் குறித்து மலையாள சினிமா கலைஞர்கள் சங்கம் கருத்து தெரிவிக்காமல் இருந்து வந்தது. இதற்கு முன்பும் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை புகார்கள் எழுந்தபோதும், நடிகர்களுக்கு ஆதரவாக AMMA அசோசியேசன் செயல்பட்டதாகவும் விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில் மலையாள சினிமா கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து அதிரடித்துள்ளனர்.
மலையாள சினிமா கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டம் ஆன்லைன் மூலம் இன்று நடந்தது. அதில் நிர்வாகச் சங்கத்தை கலைப்பது என முடிவு எடுக்கப்படுள்ளது. AMMA அசோசியேசன் தலைவர் மோகன்லால், துணைத் தலைவர்கள் ஜெயன் சேர்த்தலா, ஜகதீஸ், இணைச் செயலாளர் பாபு ராஜ், பொருளாளர் உண்ணி முகுந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான கலாபவன் ஷாஜோன், சூரஜ் வெஞ்ஞாறமூடு, ஜோயி மேத்யூ, சுரேஷ் கிருஷ்ணா, டினி டோம், அனன்யா, வினு மோகனன், டொவினோ தாமஸ், சரயூ, அன்ஸிபா, ஜோமோன் ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.
நடிகைகளின் புகாரை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கவே ஆன்லைன் கலந்தாலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் என்ன தீர்மானம் எடுப்பது எனத் தெரியாமல் வருத்தத்துடன் ராஜினாமா முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது. வாட்ஸ்அப் மூலம் நடந்த ஆன்லைன் மீட்டிங்கில் மம்மூட்டிடியுடன் ஆலோசித்து மோகன்லால் இந்த முடிவை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. “சண்டையிட இது அரசியல் அல்ல. புதிய தலைமுறையினர் வரட்டும்” என வாட்ஸ்அப் மீட்டிங்கில் மோகன்லால் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகி உள்ளது.