மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய கடந்த 2018-ல் ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு 2019 டிசம்பரிலேயே முதல்வர் பினராயி விஜயனிடம் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனாலும், கடந்த நான்கு ஆண்டுகளாக அறிக்கை வெளியிடப்படாமல் இருந்த நிலையில், மலையாள ஊடகத்தைச் சேர்ந்த சிலர் கடந்த சில நாள்களுக்கு முன்பு தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அந்த அறிக்கையைப் பெற்று வெளியிட்டனர்.

அந்த அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மலையாள பிரபல இயக்குநர் சித்திக், ரஞ்சித் உட்பட பலர் மீது நடிகைகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இதன் எதிரொலியாக, மலையாள திரைப்பட சங்கமான அம்மா-வில் (Association of Malayalam Movie Artistes) பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சித்திக் விலகினார். அவரைத் தொடர்ந்து, மலையாள சினிமா அகாடமி தலைவர் பதவியிலிருந்து ரஞ்சித் விலகினார். இவர்களைத் தொடர்ந்து, அம்மா-வில் தலைவர் பொறுப்பிலிருக்கும் மோகன்லால் உட்பட மற்ற பொறுப்புகளிலிருக்கும் அனைவரும் கூட்டாகப் பதவியை ராஜினாமா செய்திருக்கின்றனர்.
இந்த வரிசையில், மலையாள திரைப்பட நடிகரும், 2016 முதல் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ-வுமான முகேஷ் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் வந்திருக்கின்றன. இவ்வாறிருக்க, இந்த விவகாரங்கள் ஊடகங்களுக்கான தீனி, இதில் ஊடகங்கள் மக்களைத் தவறாக வழிநடத்துவதாக நடிகரும் பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய அமைச்சருமான சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் காட்டமாகப் பேசியிருக்கிறார்.

முன்னதாக, சுரேஷ் கோபி தனது லோக் சபா தொகுதியான திருச்சூரில் அரசு விருந்தினர் மாளிகையில் வெளியேறுகையில், முகேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த அவரது நிலைப்பாட்டை மாநில பா.ஜ.க தலைமை விமர்சித்தது பற்றி அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது சற்று எரிச்சலடைந்த சுரேஷ் கோபி, “நான் புரிந்துகொண்டவரையில் இது உங்களுக்கு (ஊடகங்களுக்கு) தீனி. இதைப் பயன்படுத்தி நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தப் பிரச்னைகள் நீதிமன்றத்தின் முன் இருக்கின்றன.
Union Minister Suresh Gopi getting angry at media reporters over questions on the #HemaCommitteeReport. pic.twitter.com/WYxayNrIwJ
— Mini Nair (@minicnair) August 27, 2024
இதில் முடிவெடுக்கும் உரிமை நீதிமன்றத்துக்கு இருக்கிறது. நீங்கள் உங்கள் சொந்த ஆதாயங்களுக்காக ஒருவருக்கொருவர் சண்டையிட வைப்பது மட்டுமல்லாமல், பொதுமக்களின் கருத்தையும் தவறாக வழிநடத்துகிறீர்கள். புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் இருக்கும்போது, மக்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்… நீங்கள் என்ன நீதிமன்றமா… முகேஷ் பற்றி நீதிமன்றம் ஏதாவது கூறியிருக்கிறதா… நான் அலுவலகத்தை விட்டு வெளியே வந்ததும், எனது அலுவலக செயல்பாடுகள் குறித்து நீங்கள் கேட்க வேண்டும். அதேபோல், நான் வீட்டை விட்டு வெளியே வரும்போது, அதைப் பற்றி ஏதாவது கேட்க வேண்டும், அம்மா அலுவலகத்திலிருந்து அதைப் பற்றியும் நீங்கள் கேட்க வேண்டும்” என்று கூறினார்.