2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 50 கிலோ எடைப் பிரிவைச் சேர்ந்த வினேஷ், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் கடைசி நேரத்தில் மல்யுத்த விதிமுறையின்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு மனமுடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வையும் அறிவித்தார். அரையிறுதிவரை முன்னேறியதற்காக வெள்ளிப்பதக்கம் தர மேல்முறையீடு செய்ய வேண்டும் எனச் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் சார்பில் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பு மனுத்தாக்கல் செய்தது.
ஆனால், இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்து, மனுவைத் தள்ளுபடி செய்தது நடுவர் மன்றம். இந்நிலையில் அண்மையில் வினேஷ் போகத் நாடு திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தகுதி நீக்கம் குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது பேசிய அவர், “பாரீஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனபோது நான் மிகவும் துரதிருஷ்ட வசமானவள் என்று நினைத்தேன். ஆனால் இந்தியாவுக்குத் திரும்பிய எனக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அன்பையும், ஆதரவையும் அனுபவித்த பிறகு நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று உணர்கிறேன். எந்தப் பதக்கத்தையும் விட மேலான இந்த கவுரவத்துக்கு நான் எப்போதும் கடமைப்பட்டு இருப்பேன். எனது போராட்டம் முடியவில்லை. இப்போதுதான் தொடங்கியுள்ளது. எங்கள் உள்ளிருப்பு போராட்டத்தின் போதே நாங்கள் அதைக் கூறினோம்.” என்று பேசியிருக்கிறார்.