புதுடெல்லி: “அசாமை அச்சுறுத்த உங்களுக்கு எவ்வளவு தைரியம்” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தீதி, அசாமை மிரட்ட உனக்கு எவ்வளவு தைரியம்? சிவந்த கண்களை எங்களுக்குக் காட்ட வேண்டாம். உங்கள் தோல்வி அரசியலால் இந்தியாவை எரிக்க முயற்சிக்காதீர்கள். பிரிவினை மொழி பேசுவது உங்களுக்குப் பொருந்தாது” என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் கடந்த 9-ம் தேதி ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாணவர்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடிக்கு கண்டனம் தெரிவித்து இன்று பாஜக சார்பில் 12 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், திரிணமூல் மாணவர் காங்கிரஸ் நிறுவன தின விழாவில் பேசிய மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க சட்டப்பேரவை அடுத்த வாரம் கூட்டப்படும். அப்போது, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனையை உறுதி செய்வதற்கான மசோதாவை நிறைவேற்றுவோம். இந்த மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்படும். அந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் தரவில்லை என்றால், நாங்கள் ராஜ்பவன் வெளியே உட்காருவோம். இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். மேலும், பொறுப்புக் கூறுவதை இந்த முறை ஆளுநர் தவிர்க்க முடியாது.
பாலியல் வன்கொடுமை வழக்குகள் விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு 10 நாட்களுக்குள் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று எனது அரசு விரும்புகிறது. நேற்று (ஆக. 27) தலைமைச் செயலகத்தை நோக்கி அணிவகுத்துச் சென்ற போராட்டக்காரர்களை எதிர்கொள்வதில் மாநில காவல்துறையின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. அதற்காக நான் அவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அவர்கள் தங்கள் ரத்தத்தை கொடுத்தார்கள். ஆனால் பாஜகவின் சதி வெற்றிபெறும் வகையில் ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தவில்லை.
மேற்கு வங்கத்தை சிலர் வங்கதேசம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் வங்கதேசத்தை நேசிக்கிறேன். அவர்கள் எங்களைப் போன்றே பேசுகிறார்கள். எங்கள் கலாச்சாரத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். வங்கதேசம் தனி நாடு. இந்திய தனி நாடு. மேற்கு வங்கம் பற்றி எரிய பிரதமர் மோடி தனது கட்சியைப் பயன்படுத்துகிறார்.
நீங்கள் மேற்கு வங்கத்தை எரித்தால், அசாம், வடகிழக்கு, உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, டெல்லி ஆகியவையும் எரிக்கப்படும். உங்கள் நாற்காலி கவிழ்க்கப்படும்” என கூறி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாகவே, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.