ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், பிருந்தாவன் அவென்யூ பகுதியில் நகைக்கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் கடந்த 15.8.2024-ம் தேதி 50 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீஸ் டீம், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியது. விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது ராஜஸ்தான் மாநிலம், பிவார் ஜில்லா பிப்லாஜைச் சேர்ந்த ஹர்சத்குமார் பட் (39), சுரேந்தர் சிங் ஆகிய இருவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் டீம், ராஜஸ்தானுக்குச் சென்று கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ஹர்சத்குமார் பட், சுரேந்தர் சிங் ஆகிய இருவரையும் பிடித்தது. பின்னர் இருவரையும் சென்னைக்கு அழைத்துவந்த போலீஸார், விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது.
இது குறித்து திருமுல்லைவாயல் போலீஸார் கூறுகையில், “நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமார் என்பவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினோம். பின்னர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த ஹர்சத்குமார் பட், சுரேந்தர்சி ங் ஆகியோரைப் பிடித்தோம். அவர்களிடம் விசாரித்தபோது கொள்ளையடித்த நகைகள் அனைத்தும் தங்க நகைகள் இல்லை எனத் தெரியவந்தது. அதனால் ஆத்திரத்தில் அந்த நகைகளை ரயில்வே பாலத்தில் உள்ள தண்டவாளத்தில் வீசிவிட்டோம் எனத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நகைக்கடை ஓனர் ரமேஷ்குமார் சொன்னதால்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக ஹர்சத்குமார் பட், சுரேந்தர் சிங் ஆகியோர் தெரிவித்தனர். அதைக்கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். கைதானவர்கள் அளித்த தகவலின்படி நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமாரிடம் விசாரித்தோம். அப்போது அவர், தனக்கு லட்சக்கணக்கில் கடன் இருப்பதாகவும்… அதை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தாகவும் கூறினார். அதனால்தான் தனக்குத் தெரிந்த ஹர்சத்குமார் பட், சுரேந்தர் சிங் மூலம் இந்த கொள்ளை சம்பவத்துக்கு பிளான் போட்டதாகவும் ரமேஷ்குமார் தெரிவித்தார். அதனால் நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமாரையும் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.