இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி மற்றும் ஆயுதப் படைகளின் தளபதி கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவை 2024 ஆகஸ்ட் 16 ஆம் திகதி முதல் நியமித்துள்ளார். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா 2024 ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவிடம் இது தொடர்பான நியமனக் கடிதத்தை உத்தியோகபூர்வமாக கையளித்ததுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
பண்டாரவளை புனித தோமஸ் கல்லூரியின் சிறந்த பழைய மாணவரான ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, 1989 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படையின் நிறைவேற்று கிளையில் 19வது கேடட் ஆட்சேர்ப்பின் கேடட் அதிகாரியாக சேர்ந்தார். திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், ஐக்கிய இராச்சியத்தில் டார்ட்மத் கடற்படை கல்லூரியில் (Britannia Royal Naval College – Dartmouth UK) சர்வதேச மத்திய அதிகாரி பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்தார். 1991 ஆம் ஆண்டில் துணை லெப்டினன்ட பதவியை பெற்ற இவர் 1993 ஆம் ஆண்டில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கல்லூரியில் தனது துணை லெப்டினன்ட் தொழில்நுட்ப பாடநெறியை வெற்றிகரமாக முடித்து இந்திய கடற்படை கப்பல் வெண்துர்த்தியில் பயிற்சி பாடசாலையில் நீர்மூழ்கி கடல் போர் நீண்ட பாடநெறி நிபுணத்துவத்தை 2000 ஆண்டில் பெற்றார். அவரது பணி வாழ்க்கையில் படிப்படியாக பதவி உயர்வு பெற்ற மூத்த அதிகாரி 2022 மே 04 ஆம் திகதி ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.
பங்களாதேஷ் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் 2009 ஆம் ஆண்டில் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியை வெற்றிகரமாக முடித்த அவர் 2015 ஆம் ஆண்டில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுகலை (மனித வள மேலாண்மை) பட்டமும் 2019 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் வொல்லொங்கொங் பல்கலைக்கழகத்தின் கடல்சார் கொள்கையில் முதுகலைப் பட்டம் பெற்றார். மேலும், 2021 ஆம் ஆண்டில் கொழும்பு தேசிய பாதுகாப்பு அகாடமியில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியையும் அவர் வெற்றிகரமாக முடித்தார்.
சுமார் முப்பது வருடங்களாக நாட்டில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று, எதிரிக்கு எதிரான துணிச்சலான நடவடிக்கைகளுக்காக ரணஷூர பதக்கத்தைப் பெற்றுள்ள ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, தனது பெறுமதியான சேவைக்காக மற்றும் கடமைக்கான அர்ப்பணிப்புக்காக உத்தம சேவா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.
இவர் தனது சேவையின் போது இலங்கை கடற்படையில் விரைவுத் தாக்குதல் ரோந்து படகுகளின் கட்டளை அதிகாரியாகவும் இலங்கை கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். மேலும், கடற்படைப் பயிற்சிப் பணிப்பாளர், தென்கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி, வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய ரியர் அட்மிரல் காஞ்சன பானகொட, கடற்படைத் தலைமை அதிகாரி ஆவதற்கு முன்னர் கிழக்கு கடற்படைக் கட்டளைத் தளபதியாக பணியாற்றினார்.
திருமதி அனுஷா பானகொட சிரேஷ்ட அதிகாரி ரியர் அட்மிரல் காஞ்சன பானகொடவின் மனைவியாவார், மேலும் அமாவி பானகொட என்ற மகளும் ஹிமேத் பானகொட என்ற மகனும் உள்ளனர்.