புதுடெல்லி: உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடந்து வருகிறது. இப்போரை நிறுத்த சீனா, துருக்கி, பிரேசில், சுவிட்சர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்தும், சுமுக தீர்வை எட்ட முடியவில்லை.
இந்த சூழலில், ரஷ்யா – உக்ரைன் போருக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மோடி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலையில் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சுமார் 9 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.கடந்த 23-ம் தேதி உக்ரைன் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
இதன்பிறகு, கடந்த 26-ம் தேதி தொலைபேசியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசிய மோடி, உக்ரைன் போருக்கு அமைதி பேச்சுவார்த்தை மூலம்தீர்வு காண்பது குறித்து எடுத்துரைத்தார். அப்போது வங்கதேச வன்முறைகளில் இந்துக்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இரு தலைவர்களும் ஆழ்ந்த கவலைதெரிவித்தனர்.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் பேசினார்.
இதுகுறித்து பிரதமர் மோடிவெளியிட்ட சமூக வலைதள பதிவில், ‘ரஷ்யா – உக்ரைன் போர்குறித்து அதிபர் புதினுடன் ஆலோசனை நடத்தினேன். அமைதி வழியில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக கடந்த ஜூன் 15, 16-ம் தேதிகளில் சுவிட்சர்லாந்தில் அமைதி உச்சி மாநாடு நடந்தது. இதில் ரஷ்யா பங்கேற்காததால் மாநாடு தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் முயற்சியால் இந்தியாவில் 2-வது அமைதி உச்சி மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அப்போது அதிபர் பைடனை சந்திக்க உள்ளார். ரஷ்யாவின் கசான் நகரில் அக்டோபர் 22-ம்தேதி தொடங்கும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
அப்போது ரஷ்யா – உக்ரைன் போருக்கு சுமுக தீர்வு காண்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி விரிவாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக மத்திய வெளியுறவு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.