IPL 2025 Mega Auction Cricket Latest News Updates: கிரிக்கெட் பார்ப்பது பலருக்கும் பிடிக்கும் என்றாலும், கிரிக்கெட் சார்ந்த நிகழ்ச்சிகள் நடப்பதும் பலரும் அதிகம் கவனிப்பார்கள். அந்த வகையில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தைதான் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
அதற்கு முன் எத்தனை வீரர்களை ஒரு அணி தக்கவைக்க முடியும் (IPL 2025 Retention Rules); அதில் எத்தனை இந்திய வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், Uncapped வீரர்கள்; எத்தனை Retentions, எத்தனை RTM; அணிகளின் பர்ஸ் தொகை விவரம்; எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைக்கிறார்கள், யாரை விடுவிக்கிறார்கள்; ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, எங்கு நடைபெறுகிறது என பல கேள்விகள் கிரிக்கெட் ரசிகர்களிடம் வட்டமடித்து வருகிறது.
அஸ்வின் சொல்லிய தகவல்கள்
அந்த வகையில், விரைவில் ஐபிஎல் அணிகளின் Retentions விதிகள் வெளியாகும் என கூறப்படுகிறது. அது வந்துவிட்டாலே எந்தெந்த வீரர்களை அணிகள் தக்கவைக்கின்றன என்பது அடுத்தடுத்து வெளிவரத் தொடங்கும். அணிகளுக்கு இடையே வீரர்களின் டிரேடிங்கும் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். தோனி அடுத்த சீசன் விளையாடுவாரா மாட்டாரா என்பதே இந்த Retentions விதிகள் வெளியானதற்கு பின்னர்தான் உறுதியாகும்.
இந்தச் சூழலில், இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரும், ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) இன்று அவரது யூ-ட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வங்கதேசத்திடம் பாகிஸ்தான் அடைந்த தோல்வி, ஜெய் ஷா ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டது, ஷிகர் தவான் ஓய்வு பெற்றது என கடந்த வாரம் கிரிக்கெட்டில் நடந்த விஷயங்கள் குறித்து அஸ்வினும், கிரிக்கெட் வல்லுநர் பிரசன்னா (Pdogg) ஆகியோர் பேசினார்கள்.
எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம்?
அதில் ஐபிஎல் மெகா ஏலம் (IPL 2025 Mega Auction) குறித்தும் அதில் பேசினர். அப்போது ஐபிஎல் 2025 மெகா ஏலத்தின் Retentions விதிகள் குறித்து தனக்கு கிடைத்த தகவல்களை ரவிசந்திரன் அஸ்வின் அந்த வீடியோவில் பகிர்ந்துகொண்டார். அதில், ஐபிஎல் Retentions விதிகள் அறிவிக்கப்படும் தேதி நெருங்கிவிட்டது என்று அஸ்வின் கூறினார். அதுமட்டுமின்றி, 4 வீரர்களை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட இருக்கிறது என கூறிய அஸ்வின், 2 RTM ஆப்ஷன்களும் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
தக்கவைப்பதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை?
அதிலும், 4 வீரர்களை தக்கவைப்பதில் இந்திய வீரர்கள் இவ்வளவு பேர், வெளிநாட்டு வீரர்கள் இவ்வளவு பேர், Uncapped வீரர் உள்ளிட்ட எந்த வகைமையும் இல்லாமல் அணிகள் எந்த வீரர்களை வேண்டுமானால் நிர்ணயிக்கப்படும் விலை வகைமையில் தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற விதியை கொண்டு வரப்பட வாய்ப்பிருப்பதாக அஸ்வின் கூறினார்.
உதாரணத்திற்கு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், கிளாசன், அபிஷேக் சர்மா ஆகியோரை தக்கவைத்துக்கொண்டு, மெகா ஏலத்தில் நடராஜன், நிதிஷ் ரெட்டி, மார்க்ரம் ஆகியோரில் இருவரை RTM பயன்படுத்தி எடுத்துக்கொள்ளலாம். இந்த விதி வந்தால் தோனியும் அடுத்த சீசனில் (IPL 2025) சிஎஸ்கேவில் தொடர்ந்து விளையாடுவார். அதேபோல், வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு பின் ஐபிஎல் தொடரை புறக்கணிக்கும் போக்கை தடுக்கவும் விதி வர இருப்பதாக அஸ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.