புதுடெல்லி: கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய எய்ம்ஸ உதவியை சிபிஐ நாடியுள்ளது.
கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கின் முக்கியகுற்றவாளி சஞ்சய் ராய். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதா என்பதை டிஎன்ஏமற்றும் தடயவியல் சோதனை மூலம் மட்டுமே உறுதி செய்ய முடியும்.
இதற்கு எய்ம்ஸ் உதவியை சிபிஐ நாடியுள்ளது. எய்ம்ஸ் அறிக்கை கிடைத்த பின்பே, இந்த பாலியல் வன்கொடுமை கொலையில் ஒருவருக்கு மட்டும் தொடர்பு உள்ளதா அல்லது பலருக்கு தொடர்பு உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.
பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள தகவல் கூறியிருப்பதாவது: குற்றவாளி சஞ்சய் ராய், சம்பவம் நடந்த அன்று காவல் ஆணையர் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை ஓட்டியுள்ளார். அதே காவல் ஆணையர்தான் இந்த வழக்கை முறையாக விசாரிக்காமல் தற்கொலை எனக் கூறினார். இச்சம்பவத்தின்போது அவருடன் முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.
போலி மருந்துகள்: இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடைபெற முதல்வர் மம்தா, கொல்கத்தா காவல் ஆணையர் இருவரும் பதவி விலக வேண்டும். இவர்களை சிபிஐ பாதுகாப்பில் எடுத்து விசாரித்து, இவர்களின் போன் பதிவுகளை ஆராய வேண்டும். பெண் மருத்துவர் கொலையில் உள்ள சதியை வெளிக்கொணர அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்.
மருத்துவமனைக்கு வாங்கப் பட்ட டி.பி மருந்துகள் அண்டை நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அதற்கு பதில் போலி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நுரையீரல் நிபுணரான பெண் மருத்துவர், நெஞ்சக மருந்து துறையில் நடைபெற்ற இந்த மோசடியை கண்டுபிடித்தாரா? இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு அமித் மாளவியா கூறினார்.
போலீஸார் விளக்கம்: காவல் ஆணையர் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தை குற்றவாளி பயன்படுத்தியுள்ளார் என்ற குற்றச்சாட்டுக்கு, பதில் அளித்த கொல்கத்தா போலீஸார், ‘‘ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காவல் துறை வாகனங்கள் காவல் ஆணையர்பெயரில்தான் பதிவு செய்யப்படும். இது வழக்கமான நடைமுறை. போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்த குற்றவாளி காவல்துறைக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை பயன்படுத்தியுள்ளார்’’ என்று அவர் தெரிவித்தார்.