Buchi Babu Match: இந்தியாவில் உள்ள உள்நாட்டு வீரர்களுக்காக நடத்தப்படுவது புச்சி பாபு தொடர் ஆகும். இந்த போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் சர்ஃபராஸ் கான் தலைமையில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் TNCA XI அணிக்கு எதிராக விளையாடி வருகின்றனர். ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் இந்திய டெஸ்ட் அணியில் நிரந்தர இடத்தை பெற போராடி வரும் நிலையில், சமீபத்தில் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவதை நோக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் இந்திய அணிக்காக அனைத்து வித போட்டிகளிலும் விளையாட விரும்புவதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இந்த மூன்று பேருக்கும் இடையில் கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு இடத்திற்காக மோதும் சூர்யா, ஷ்ரேயாஸ் மற்றும் சர்ஃபராஸ்!
இந்திய டெஸ்ட் அணியில் மிடில் ஆர்டரில் ஒரு இடத்தை பிடிக்க ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் மற்றும் சர்ஃபராஸ் கான் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இலங்கை தொடருக்கு பிறகு இந்திய அணி செப்டம்பர் மாதம் பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்பின் நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் பார்டர்-கவாஸ்கர் டிராபி என தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான சர்பராஸ் கான் சிறப்பாக விளையாடி இருந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் இனி அவரது இடது கன்பார்ம் என்று கூறப்படுகிறது. தற்போது மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர்
சூர்யகுமார் யாதவ் இதுவரை ஒரே ஒரு சர்வதேச டெஸ்டில் மட்டுமே விளையாடியுள்ளார். 82 முதல்தர போட்டிகளில் விளையாடி 5628 ரன்களைக் குவித்தும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சூர்யா இடம் பெறவில்லை. மறுபுறம் ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. மேலும் பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் இருந்தும் நீக்கப்பட்டார். ஐபிஎல் 2024ல் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கிய ஐயர் கோப்பையை வென்று கொடுத்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் அணியில் எடுக்கப்பட்டார், இருப்பினும் ரன்கள் அடிக்கவில்லை. தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற தன்னால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
நீண்ட நாட்களாக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வந்த சர்ஃபராஸ் கானுக்கு இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை சரியாக பயன்படுத்தி கொண்ட அவர் ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று அரை சதங்கள் உட்பட 200 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தொடரில் விராட் கோலி இல்லாததால் துருவ் ஜூரல், ரஜத் படிதார் ஆகியோருடன் சர்ஃபராஸ் கானும் டெஸ்டில் அறிமுகமானார். ரிஷப் பந்த் மீண்டும் வந்துள்ளதால் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான் மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோரில் யாருக்கு பிளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது என்பதை தெரிந்து கொள்ள சுவாரஸ்யமாக இருக்கும்.