சென்னை: சென்னை மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியில் 11 மண்டலங்களில் தூய்மைப் பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநகராட்சியில் உள்ள பல்வேறு துறை பணிகளும் தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தற்போது ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் மண்டலங்களிலும் தூய்மைப் பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாவட்ட குழு சார்பில் ரிப்பன் மாளிகை முன்பு, கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்டோர் பங்கேற்று, சென்னை மாநகராட்சி பணிகளை தனியார் மயமாக்காதே, தூய்மை பணியாளர்களை நிரந்தரப்படுத்து, ஒப்பந்த பணியாளர்களுக்கு மாதம் குறைந்தபட்சம் ரூ.28 ஆயிரம் சம்பளம் வழங்கிடு, தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய், ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்காதே, மாநகராட்சி பள்ளிகளை மூடாதே என கோஷமிட்டனர்.
இந்நிலையில் அனுமதியின்றி ரிப்பன் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா, வேல்முருகன், எல்.சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.