பஹ்ரைன் நாட்டிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக அந்நாட்டின் விமான நிலையத்தை சென்றடையும் சகல வெளிநாட்டவர்களுக்கும் சர்வதேச வங்கிக் கணக்கொன்றை (IBAN- International Bank Account Number) வழங்குவதற்கு பஹ்ரைன் தொழிற்சந்தை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (LMRA) நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.
இது இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அந்நாட்டின் இலங்கைத் தூதுவராலயத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் இது தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு இச்சர்வதேச வங்கிக் கணக்கு அறிமுகப்படுத்தப்படுவதனால் தொழிலாளி மற்றும் சேவை வழங்குநர் இடையே, கொடுப்பனவை உறுதிப்படுத்துதல் மற்றும் சரியான கொடுக்கல் வாங்கல் இடம்பெறுதலை உறுதிப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அவ்வாறே தொழிலாளியின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்களின் சம்பளக் கொடுப்பனவை வங்கி ஊடாக மேற்கொள்வதற்கும், சம்பளம் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்வதைக் குறைப்பதற்கும் பஹ்ரைன் அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை பஹ்ரைனின் தொழில் சந்தை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (LMRA) யின் www.lmra.gov.bh என்ற இணையத்தளத்தில் பிரவேசித்து அல்லது 00973-17506055 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்கொண்டு பெற்றுக்கொள்ளலாம்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பஹ்ரைன் நாட்டிற்குள் நுழையும் போது, அந்நாட்டு விமான நிலையத்தில் இச்சர்வதேச வங்கிக் கணக்கைப் பெற்றுக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் சந்தர்ப்பம் மற்றும் வழிகாட்டல் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.