மதுரை: சிலை கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேலை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: “டிஎஸ்பி காதர்பாட்ஷா தொடர்ந்த வழக்கில் டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை கொண்டு என் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் டிஐஜி அந்தஸ்து அதிகாரி இல்லாமல் சிபிஐ எஸ்பி என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்.
என் மீது வழக்கு பதிவு செய்ய எஸ்பிக்கு அதிகாரம் இல்லை. சிபிஐ அதிகாரிகள் என் வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை பறிமுதல் செய்தது சட்டவிரோதம். இது என் மீதான நன்மதிப்பை கெடுப்பதாகவும், என் அடிப்படை உரிமையை மீறுவதாகவும் உள்ளது. நீதிக்கு எதிரான நான் துன்புறுத்தப்பட்டு வருகிறேன். நான் எங்கும் தலைமறைவாகவில்லை. எனவே முன்ஜாமீன் வழங்க வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில், “உயர் நீதிமன்ற உத்தரவுபடியே மனுதாரர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், குற்றம் நடைபெற்றிருப்பதற்கு முகாந்திரம் இருப்பதால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பொன் மாணிக்கவேலை கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால் தான், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் கபூருக்கும், அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து தெரிய வரும்.
இந்தச் சூழலில் பொன் மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். ஆகவே முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என வாதிடப்பட்டது. பின்னர் மூடி முத்திரையிட்ட அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்தது. பொன் மாணிக்கவேல் தரப்பில், பழிவாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டது. பின்னர் விசாரணையை நாளைக்கு (ஆக.29) நீதிபதி ஒத்திவைத்தார்.