மத்தியப் பிரதேச மாநிலம், சத்னா மாவட்டத்தில் ஆற்றில் பசுமாடுகளை தூக்கிப்போட்ட வீடியோ, சோசியல் மீடியாவில் வைரலாக பரவி, அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று பாம்ஹர் அருகில் இருக்கும் சத்னா ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்திற்கு ஒரு கும்பல் பசுமாடுகளை ஓட்டி வந்தது. அக்கும்பல் ஒவ்வொரு பசு மாடாக ஆற்றுக்குள் பிடித்து தள்ளியது. மொத்தம் 50 பசுமாடுகள் ஆற்றில் தள்ளிவிடப்பட்டன. இதில் 20 மாடுகள் இறந்து கரை ஒதுங்கியது. மற்ற மாடுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில மாடுகள் கரைக்கு நீந்தி வந்து சேர்ந்தன. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. மாடுகள் ஆற்றில் தள்ளிவிடப்பட்ட கண்காணிப்பு பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த போலீஸார் தாங்களாக முன்வந்து இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்று தகவல்களை சேகரித்தனர். அதோடு உள்ளூர் மக்களின் துணையோடு மாடுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் ஆற்றில் தூக்கிப்போட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பீடா பாக்ரி, ரவி பாக்ரி, ராம்பால், ராஜ்லு ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நான்கு பேரும் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மொத்தம் எத்தனை மாடுகள் ஆற்றில் தூக்கிப்போடப்பட்டது என்பது குறித்து விசாரணைக்கு பிறகுதான் தெரிய வரும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் பாண்டே தெரிவித்தார். முதிர்ச்சியடைந்த மாடுகளை அவர்கள் ஆற்றில் தூக்கிப்போட்டு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.