Rinku Singh : டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் ரிங்கு சிங் இருந்தாலும் அவர் ஒரு போட்டியில் கூட களமிறக்கப்படவில்லை. இதனால் கடும் வருத்தத்தில் இருந்த ரிங்கு சிங், அது குறித்து முதன்முறையாக மவுனம் கலைத்து பேசியுள்ளார். எனக்கு அடுத்தடுத்த டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்றும், அதனால் இப்போது நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என வருத்தப்பட வேண்டாம் என ரோகித் சர்மா தன்னிடம் வந்து நேரடியாக பேசியதாக ரிங்கு சிங் கூறியுள்ளார். மேலும், என்னுடைய பேவரைட் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும் களத்தில் விளையாட முடியவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து கேப்டன் ரோகித் சர்மாவே நேரடியாக வந்து பேசினார். நான் இளமையாக இருப்பதால் நிறைய டி20 உலகக்கோப்பைகள் உன்னால் விளையாட முடியும், அதனால் இப்போது வாய்ப்பு கிடைக்காததை குறித்து கவலைப்படாமல் உன்னுடைய கிரிக்கெட்டில் கவனம் செலுத்து என கேப்டன் ரோகித் சர்மா அறிவுறுத்தினார். அதனை ஏற்றுக் கொண்டேன். எனக்கு இன்னும் நிறைய டைம் இருக்கிறது. இந்திய அணிக்காக நிறைய போட்டிகளில் விளையாட தயாராக இருக்கிறேன்.” என ரிங்கு சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருப்பதாகவும், இப்போதைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்பது மிகப்பெரிய சவாலான விஷயம் என்றும் ரிங்கு சிங் தெரிவித்துள்ளார். “எனக்கு டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதுவும் இப்போதைய காலகட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. என்னைப் போன்ற பலரும் குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் ஆடிய அனுபவம் இருக்கிறது. ஆனால் என்னைப் பொறுத்துவரையில் நீண்ட நாட்கள் ஆடக்கூடிய டெஸ்ட் கிரிக்கெட்டிலும் திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதிலும் கவனம் செலுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.
இவரைப் போலவே டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அவர் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்திருந்தாலும், விளையாடும் பிளேயிங் லெவனில் சேர்த்துக் கொள்ளப்படவே இல்லை. பிளேயர்களின் காம்பினேஷன் காரணமாக இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை என்று, இதற்கான காரணமாக சொல்லப்பட்டது.