நாணயம் விகடனும், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஆம்ஃபியும் இணைந்து ‘முதலீடுகளும் நீங்களும்’ என்ற தலைப்பில் முதலீட்டாளர்கள் விழிப்பு உணர்வு நிகழ்ச்சி களை அண்மையில் நடத்தின. ஜூலை 20-ம் தேதி மதுரையிலும், 21-ம் தேதி திருநெல்வேலி யிலும் நிகழ்ச்சிகள் நடந்தன.
சூப்பராகப் பேசிய சுவாமிநாதன்…
இந்த இரு நிகழ்ச்சிகளிலும் ஆம்ஃபி அமைப்பின் சார்பாக ஆதித்ய பிர்லா சன் லைப் மியூச்சுவல் ஃபண்ட் தமிழ்நாடு பிராந்திய தலைவர் க.சுவாமிநாதன் பேசினார். “மியூச்சுவல் ஃபண்ட் முதலீடானது, நேரடி யாகப் பங்குகளில் முதலீடு செய்வதால் வரக் கூடிய ரிஸ்க்குகளைப் பெருமளவு குறைக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே ஸ்மால்கேப் பிரிவிலுள்ள பங்குகள் இரண்டு, மூன்று மடங்கு என லாபத்தைக் தந்திருக்கின்றன. ஆனால், அந்தப் பங்குகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அதற்கேற்ப வருவாய் மற்றும் லாப வளர்ச்சியைப் பதிவு செய்திருக்கின்றனவா எனில், இல்லை. எனவே இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் பலனை, இந்தியப் பங்குச் சந்தை வளர்ச்சியின் பலனை அடைய வேண்டுமெனில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதே சிறந்த வழி” என்று பேசினார்.
எச்சரித்த ஏ.கே.நாராயண்…
மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் நாணயம் விகடன் சார்பாக நிதி நிபுணர், முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, “முதலீடுகள் பற்றிப் பலரும் இப்போது நிறையவே தேடித் தேடி தெரிந்துகொள்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் முதலீடுகளைச் சரியான பாதையில் மேற்கொள்கிறார்களா என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எனவே, முதலீடுகளைப் பற்றி அனைவரும் கவனமாகப் படிக்க வேண்டும்.
இந்தியா முழுக்க இப்போது மியூச்சுவல் ஃபண்டில் வெறும் 5% பேர் மட்டுமே முதலீடு செய்கிறார்கள். மீதமுள்ள 95% பேர் இன்னமும் விழிப்பு உணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இந்தியப் பொருளாதாரம் உலகின் வேறு எந்த நாட்டையும்விட மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சியைப் பயன் படுத்திக்கொள்ளாமல் இருந்தால் பின்னாளில் வருத்தப்படுவீர்கள்” என்று எச்சரித்தார்.
பெருமைப்பட்ட சோம.வள்ளியப்பன்…
திருநெல்வேலியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளர், பேச்சாளர், நிதி நிபுணர் சோம.வள்ளியப்பன் பேசினார். ‘இதற்குமுன் சென்செக்ஸ் எப்போது 50000 புள்ளிகளைத் தொடும், 75000 புள்ளிகளைத் தொடும் என்று கேட்டவர்கள், இப்போது சென்செக்ஸ் 100000 புள்ளிகளை எப்போது தொடும் என்று கேட்கிறார்கள். சந்தை புதிய உச்சத்தை எட்ட எட்ட, முதலீட்டாளர்கள் அடுத்தகட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டே இருக்கிறார்கள்.
25 வருடங்களுக்குமுன் நான் பங்குச் சந்தைக் குள் அடியெடுத்து வைக்கும்போது வழிகாட்ட என்று யாரும் இல்லை. இதை இப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்யக் கூடாது என்று சொல்லித் தர ஆள் இல்லை. ஆனால், இன்று முதலீட்டாளர்களின் நலனுக்காக பல அமைப்புகள் உள்ளன.
ஆம்ஃபியின் ‘மியூச்சுவல் ஃபண்ட் சரியானது’ என்ற பிரசாரம், நாணயம் விகடன் போன்ற பத்திரிகைகள் நடத்தும் முதலீட் டாளர்கள் கூட்டங்கள் மக்களுக்கு முதலீடு களைப் பற்றிய தெளிவைச் சொல்லி வழி காட்டுகின்றன.
மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.60 லட்சம் கோடி முதலீடுகள் குவிந்திருக்கின்றன. சமீபத் தில் ஒரு மாதத்தில் ரூ.21,000 கோடியை எஸ்.ஐ.பி மூலமாக முதலீடு செய்கிறார்கள். குறிப்பாக, இன்றைய இளைஞர்கள் சம்பாதிக் கத் தொடங்கிய முதல் மாதமே எஸ்.ஐ.பி முதலீட்டைத் தொடங்குகிறார்கள். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
நிதி சுதந்திரத்தை நோக்கி இளைய தலை முறை நடைபோடுவதைப் பார்க்கும்போது நாம் நிச்சயம் பெருமைப்படலாம். அதே சமயம், சரியான பாதையில் செல்கிறார்களா என்பதை ஆலோசிப்பதும் ஆராய்வதும் முக்கியம்” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் முதலீட்டாளர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நிபுணர்கள் பொறுமையாகவும் தெளிவாகவும் பதில் தந்தார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்தக் கூட்டத்தில் பலரும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பங்கு கொண்டது ஆச்சர்யம் தருவதாக இருந்தது!