கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்த கோணம் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பி.எம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பெரும்பாலும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணியாற்றுவோரின் குழந்தைகள் அதிகமாக படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக ராமச்சந்திர சோனி என்பவர் பணிபுரிந்துவந்தார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமச்சந்திர சோனி கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக மாணவி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் விசாரணை நடத்தியுள்லார். அதில், ஆசிரியர் தவறான நோக்கத்துடன் தோளில் தட்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக மாணவிகள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து ஓவியர் ராமச்சந்திர சோனி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியும் பள்ளி மாணவிகளிடம் இது குறித்து விசாரணை நடத்தியதுடன், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸாரின் விசாரணையில் ஆசிரியர் ராமச்சந்திர சோனி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து ஓவிய ஆசிரியர் ராமச்சந்திர சோனி மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.
வழக்குப்பதிவைத் தொடர்ந்து ஓவிய ஆசிரியர் ராமச்சந்திர சோனியை போலீஸார் கைதுசெய்தனர். இவர் ஏற்கெனவே பல்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் வேலை செய்துள்ள நிலையில், இப்போது மாணவிகள் புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.