அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, தொடர்ந்து சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து எப்போதும் ஊடக வெளிச்சத்தில் இருப்பவர். இந்த நிலையில், அஸ்ஸாமின் நாகவுன் மாவட்டம், திங் என்ற இடத்தில் கடந்த 22-ம் தேதி 14 வயது மாணவியை 3 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஒருவர், காவல்துறையிடமிருந்து தப்பி குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். தலைமறைவான மற்ற இருவரை காவல்துறை தேடி வருகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணியில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து சட்டமன்றத்தில் விவாதித்த எதிர்க்கட்சிகள், ‘ஒரு மாநிலத்தின் முதல்வர் பாரபட்சமாக நடந்துகொள்கிறார்’ எனக் குற்றம்சாட்டின.
இதற்குப் பதிலளித்த ஹிமந்த பிஸ்வா சர்மா, “நான் ஒரு தரப்புக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறீர்கள். அப்படியே இருந்துவிட்டு போகட்டும். தெற்கு அஸ்ஸாமை சேர்ந்தவர்கள் ஏன் வடக்கு அஸ்ஸாமுக்கு செல்கின்றனர்? இதன் மூலம் மியா முஸ்லிம்கள் அஸ்ஸாமை கைப்பற்ற முயற்சி செய்கின்றனரா? இதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’’ என்றார்.
ஹிமந்த பிஸ்வா சர்மா இரண்டு வகுப்பினருக்கு மத்தியில் மோதல் ஏற்படும் வகையில் பேசிவருகிறார் எனக் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில், அஸ்ஸாமில் உள்ள 18 எதிர்க்கட்சிகள், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், “நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததிலிருந்து, அஸ்ஸாம் முதல்வர் சட்ட மன்றத்துக்குள்ளும், வெளியேயும் மதக் கலவரங்களை உருவாக்கும் வகையில், உணர்ச்சிகரமாகப் பேசி வருகிறார்.” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.