Dhanush: தயாரிப்பாளர்களுக்கு தனுஷ் பச்சைக்கொடி; நடிகர் சங்க கூட்டத்தில் நடந்த திருப்பங்கள்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் வரும் செப்டம்பர் மாதம் 8-ம் தேதி சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக நடிகர் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்திருக்கிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டுக் கலந்தாய்வுக் கூட்டத்தில் நடிகர்களின் சம்பளம், உதவியாளர்கள் சம்பளம், உடன் வரும் பாதுகாவலர்கள் விவகாரம் உள்படப் பல்வேறு தீர்மானங்களும், அக்டோபர் 30க்குப் பிறகுப் படப்பிடிப்பு நிறுத்தம், புது படப்பிடிப்புகள் தொடக்கக் கட்டுப்பாடு, நடிகர்கள் விஷால், தனுஷுக்குக் கட்டுப்பாடுகளும் எனப் பல்வேறு விவகாரங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், நடிகர்களின் இந்தக் கலந்தாய்வுக்குக் கூட்டம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நடிகர் சங்க கூட்டத்தில்..

கடந்த ஞாயிற்றுக்கிழமை, சென்னை என்.எஃப்.டி.சி. திரையரங்கத்தில் நடந்த நடிகர் சங்க கூட்டத்தில் தலைவர் நாசர், துணைத் தலைவர்கள் பூச்சி எஸ்.முருகன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி மற்றும் தியாகராஜன், பிரஷாந்த், ஆர்யா, ராஜ்கிரண், ஷாம், குட்டி பத்மினி, லதா, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, விஜய் சேதுபதி, சிபி, விக்னேஷ், விஜய் ஆண்டனி, யோகிபாபு எனப் பலரும் வந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன என்றும், தயாரிப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும், நட்புணர்வோடு பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் முயற்சிகள் எடுப்பது என்றும் பேசியதாகச் சொல்கிறார்கள்.

கூட்டத்தில்..

அதைப் போல திரைத்துறையைச் சீரமைப்பது தொடர்பாகக் கடந்த 2007ல் நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் ஒப்பந்தம் நிறைவேற்றினார்கள். அதை இப்போது வரை இருதரப்பினரும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளனர். அதில் நடிகர்களின் கால்ஷீட் விவகாரம், முன்பணம் விவகாரம், ஜி.எஸ்.டி. எனப் பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளனர். அதில் தொடர்புடைய நடிகர்கள் பலரையும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கூட்டத்திற்கு வரவழைத்துப் பேசியுள்ளனர்.

தவிரத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இப்போதைய கோரிக்கைகள் குறித்தும் அந்தக் கூட்டத்தில் பேசியுள்ளதாகச் சொல்கிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகளுக்குச் சம்பந்தப்பட்ட நடிகர்கள் கொடுத்த பதிலுடன், நடிகர் சங்கத்தின் புதிய கோரிக்கைகளும் சேர்த்து ஒரு பதிலறிக்கை ரெடி செய்துள்ளனர். அதைத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வழங்க உள்ளனர். இனி வரும் காலங்களில் திரைப்படத் துறையினர் வளர்ச்சியைக் கருத்தில் கொண்ட விஷயமாக அது இருக்கும் என்கின்றனர்.

தனுஷ், அதிதி

தவிர இந்த கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தனுஷுக்கும், விஷாலுக்கும் உள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் பேச்சு எழுந்துள்ளது. விஷால், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தலைவர் பொறுப்பிலிருந்துள்ளதால் அவரது பிரச்னையில் நடிகர் சங்கம் தலையிடாது என்கிறார்கள். நடிகர் சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பில் உள்ள விஷால், இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதால் அவர் குறித்து யாரும் விவாதிக்கவில்லை. நடிகர் தனுஷ், பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் துவங்குவதற்கு முன்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதால், அவர் கமிட் ஆன தயாரிப்பாளர்களிடம் தீர்வு காணவும் ஞாயிறு கூட்டத்தில் ஆலோசித்துள்ளதாகத் தெரிகிறது.

அதாவது தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தயாரிப்பில் ஒரு படம் இயக்கி, நடித்தார். அதிதி ராவ், எஸ்.ஜே.சூர்யா எனப் பலரும் அதிலிருந்தனர். ஆனால் சில காரணங்களால் அந்த படம் மேற்கொண்டு வளராமல் போனது. தனுஷ் அந்த படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு வேறு படங்களுக்குச் சென்று விட்டார் என்றும், அதைப் போல ‘ஆடுகளம்’ தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிப்பில் ஒரு படம் பண்ணுவதாக முன்பணம் வாங்கி பல ஆண்டுகள் ஆகியும், படம் நடித்துக் கொடுக்காமல் இருக்கிறார் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

முரளி ராமசாமி

இந்நிலையில், தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு ஒரு படம் பண்ணுவதாகவும், அது அவர்களுக்கு ஏற்கெனவே இயக்கிய படத்தின் தொடர்ச்சியாக இல்லாமல் புதுக்கதையை இயக்க உள்ளதாகவும் சொல்கிறார்கள். முரளிக்குப் படம் பண்ணுவது குறித்து தனுஷ் சம்மதித்துவிட்டார். இதுகுறித்தான அவரது கடிதத்தை நடிகர் சங்கம் மூலமாகக் கொடுத்திருக்கிறார் என்கின்றனர். ‘ஆடுகளம்’ கதிரேசனுக்கு தனுஷ் கொடுக்க வேண்டிய முன்பணத் தொகையைத் திருப்பிக் கொடுக்க சம்மதித்துள்ளார். ஆனால், தனுஷுக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே முன்பணம் கொடுத்துள்ளதாகவும், அதற்கான வட்டியுடன் கணக்குப் போட்டுத் திருப்பி தரவேண்டுமெனவும் கதிரேசன் கேட்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருவதாகவும், அவரது பிரச்னையும் பேசி தீர்க்கப்பட்டு வருவதாகவும் தனுஷ் தரப்பில் சொல்கிறனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.