பொருளாதார உலகில் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் வளர்ச்சியுடன், மோசடிகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. அதே நேரத்தில், இந்த மோசடிகளைத் தடுக்கும் விதமாக “National Payments Corporation of India” (NPCI) முக்கியமான நடவடிக்கையை எடுத்துள்ளது.
அதிகமாக டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்யும் நாடான இந்தியாவில் சமீப காலங்களில், UPI பணம் செலுத்துவதன் மூலம் பல மோசடி வழக்குகள் சாதாரண மக்களைத் தீவிர கவலையில் ஆழ்த்தியுள்ளது. மறுபுறம், இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் பேமென்ட்கள் எளிதாகவும், விரைவாகவும் UPI மூலம் செய்யப்படுவதால், UPI-யையே மக்கள் பெரிய அளவில் விரும்புகிறார்கள்.
புதிய UPI பேமென்ட் விதிகள்:
பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக, முன்பிருந்த PIN அடிப்படையிலான சரிபார்ப்பு செயல்முறைக்குப் பதிலாக, இப்போது பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பின்பற்றுவதற்கு NPCI ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.
இந்தப் புதிய அமைப்பின் கீழ், UPI பரிவர்த்தனைகள் கைரேகை (Fingerprint) ஸ்கேனிங் அல்லது முக அங்கீகாரம் மூலம் சரிபார்க்கப்படும். ஸ்மார்ட்போன்களில் ஏற்கெனவே உள்ள இந்த அம்சங்களைப் பயன்படுத்தி, UPI பரிவர்த்தனைகளை இன்னும் பாதுகாப்பானதாகவும் எளிதாகவும் மாற்ற முடியும் எனக் கூறப்படுகிறது.
பயோமெட்ரிக் அங்கீகாரத்தால் பயனர்களுக்கு இந்தப் புதிய மாற்றம் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் எனவும், இதன் மூலம் மோசடி சம்பவங்களைப் பெருமளவு கட்டுப்படுத்த முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.