நடிப்பில் மட்டுமில்லாமல் திரைப்படங்களை இயக்குவதிலும் தற்போது அதிக கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
அவர் இயக்கி நடித்திருந்த ‘ராயன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இப்படத்தின் வெற்றிக்காக இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் இயக்குநர் தனுஷுக்கு ஒரு காசோலை, நடிகர் தனுஷுக்கு ஒரு காசோலை என மொத்தமாக இரண்டு காசோலைகளை வழங்கினார். ‘ராயன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்க தொடங்கிவிட்டார் தனுஷ்.
இத்திரைப்படத்தில் தனுஷின் அக்கா மகனான பவிஷ், அனிகா சுரேந்தர், மலையாளத்திலிருந்து வந்திருக்கும் மேத்யூ தாமஸ், ப்ரியா வாரியர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். எப்போதும் தான் பணியாற்றும் திரைப்படங்கள் குறித்து அவ்வப்போது ஏதேனும் ஒரு அப்டேட்டை ஜி.வி.பிரகாஷ் ட்விட்டரில் பதிவிட்டுக் கொண்டே இருப்பார். அதே போலச் சமீபத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் சிங்கிள் குறித்தான ஒரு ட்வீட் போட்டிருந்தார். அந்த ட்வீட் வந்த ஓரிரு நாட்களிலேயே இத்திரைப்படத்தின் சிங்கிள் ரிலீஸ் குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகிவிட்டது.
இப்படத்தின் முதல் பாடலான ‘கோல்டன் ஸ்பாரோவ் (Golden Sparrow)’ வருகிற ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகிறது. முக்கியமாக, ப்ரியங்கா மோகன் இப்பாடலில் கேமியோ ரோலில் வருகிறார். இதில் கூடுதல் ஸ்பெஷல் ஒன்று இருக்கிறது. இந்த பாடல் தொடர்பாக நேற்று எஸ்.ஜே.சூர்யா போட்டிருந்த ட்வீட்டில் தனுஷின் மூத்த மகனான யாத்ராதான் இப்பாடலையை எழுதியிருக்கிறார் எனக் குறிப்பிட்டிருந்தார். இதன் பிறகு யாத்ராதான் இப்பாடல் முழுவதையும் எழுதியிருக்கிறார் என்ற தகவல் பரவி வந்தன. ஆனால், இப்பாடலைப் பாடலாசிரியர் அறிவுதான் எழுதியிருக்கிறார். முக்கியமான நான்கு வரிகளை மட்டும்தான் யாத்ரா எழுதியிருக்கிறாராம்.
படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒன்டர்பார் ஃப்ளீம்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ-வான ஸ்ரேயஸ் இத்தகவலை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டை ஒன்டர்பார் ஃப்ளீம்ஸ் நிறுவனம் ரீட்வீட் செய்து உறுதிப்படுத்தியுள்ளது.
‘Gen -z’ களை பற்றிய காதல் கதை என்பதால் டிரெண்டிற்கேற்ப தனுஷ் தனது மகனையே எழுத வைத்திருக்கிறார் என்கிறார்கள்.