இந்திய நிதியுதவியின் கீழ் நெடுந்தீவு, நைனாத்தீவு மற்றும் அனலைத்தீவில் கலப்பு மின் திட்டங்கள் அமைக்கப்பட உள்ளன.

இது தொடர்பான முதல் கட்ட நிதியை இந்தியா நேற்று (28) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஷாவினால் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபையின் தலைவர் ரஞ்சித் சேபாலா ஆகியோரிடம் இது கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இந்த திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 2022ஆம் ஆண்டு மார்ச்சில் இலங்கையும் இந்தியாவும் கையெழுத்திட்டன.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி இலங்கை சுனித்யா எரிசக்தி அதிகாரசபை மற்றும் யு சோலார் கிளீன் எனர்ஜி நிறுவனத்திற்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட பின், அந்த தீவுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்.

தற்போது, ஆரம்ப கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இலங்கையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்தியா 11 மில்லியன் டொலர் நிதியுதவி அளித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.