அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மகன் நிச்சயதார்த்தம் கோவையில் சமீபத்தில் நடைபெற்றது. அந்த நேரத்தில் சேலத்தில் இருந்தும் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்ளாதது கட்சிக்குள் பேசுபொருளாகியிருக்கிறது. “எடப்பாடிக்கு முறையாக அழைப்பு விடுத்து அவரிடம் தேதி வாங்கியே நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறது வேலுமணி தரப்பு. ஆனாலும், தன்னுடைய மனைவி மற்றும் மகனை அனுப்பி வைத்துவிட்டு கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கிறார் எடப்பாடி” என்கிறார்கள் வேலுமணி தரப்பில். “அன்றைய தினம் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதனால்தான் அவர் கலந்து கொள்ளவில்லை. திருமணத்தில் நிச்சயம் கலந்துகொள்வார்” என்கிறார்கள் எடப்பாடி தரப்பில். “பிரிந்து சென்றவர்களை இணைக்க வலியுறுத்தி சீனியர்களைத் தூண்டிவிடுவது, பா.ஜ.க- அ.தி.மு.க கூட்டணிக்கு அடிபோடுவது என சமீபத்தில் கட்சிக்குள் ஏற்பட்ட சிக்கல்களுக்கு வேலுமணி தரப்புதான் காரணம் என நினைக்கிறார் எடப்பாடி. அதனால்தான் நிகழ்ச்சியைத் தவிர்த்திருக்கிறார்” என்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை சீனியர்கள்.
தி.மு.க மருத்துவ அணியின் மாநில துணைச் செயலாளராக அமைச்சர் ராஜகண்ணப்பனின் மகன் திலீப்குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். துணை அணிகளுக்கான நிர்வாகிகள் நியமனம் முடிந்து ஓராண்டுக்குமேல் ஆகிவிட்ட நிலையில் இப்போது ஏன் இந்தத் திடீர் நியமனம் என விசாரித்தால், “அப்பா இருக்கும்போதே, தி.மு.க-வில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று முயன்றுவந்தார் திலீப்குமார். ஆனால், கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்காதவர் என்பதாலேயே, மக்களவைத் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.

எனவேதான், மேலிடத்தில் பேசி மகனுக்கு மருத்துவர் அணி பொறுப்பை வாங்கிக்கொடுத்து, கைதூக்கிவிட்டிருக்கிறார் கண்ணப்பன்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். “ஏற்கெனவே கட்சி நிர்வாகிகளையும், மக்களைச் சந்திப்பது, மனுக்களை வாங்குவது, உள்ளூர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது என தந்தைக்கு உதவியாக திலீப் குமார் இருந்துவந்தார். இனி நேரடி அரசியலிலும் அவரைப் பார்க்கலாம்” என்கிறார்கள் அமைச்சருக்கு நெருக்கமானவர்கள்!
பா.ஜ.க-வில் மாநில தலைவர் பதவியைத் தவிர ஏனைய முக்கிய நிர்வாகிகளின் பதவிகளின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது துணைத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள், மாநிலச் செயலாளர்கள் தொடங்கி மண்டல தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள் பதவிகளில் சீனியர்களின் ஆதரவாளர்களே இருக்கிறார்கள். அவர்களை முழுவதுமாக நீக்கிவிட்டு அனைத்துப் பொறுப்புகளிலும் தன்னுடைய ஆதரவாளர்களை நியமிக்க நினைக்கிறாராம் அண்ணாமலை.

“இதற்காக அவரது சார்பில் டெல்லியில் ஒரு லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் சீனியர்கள் சிலரும் தங்கள் ஆதரவாளர்களுக்குப் பொறுப்புக் கொடுக்க வேண்டும் என ஒரு லிஸ்ட்டை டெல்லியிடம் நீட்டியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களும் தங்களுக்கான பதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதால் அறிவிப்பு வெளியாகும் நாளில் கமலாலயத்தில் பெரும் களேபரமே வெடிக்கும்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
தலைநகரிலுள்ள மார்க்கெட் பகுதிக்குப் பொறுப்பான உணவுப் பாதுகாப்பு அதிகாரி, வசூல் வேட்டையில் கொழிக்கிறாராம். தன்னுடைய ஆட்கள் மூலமாக குறிப்பிட்ட சில உணவகங்கள் குறித்து மொட்டை பெட்டிஷன்களைப் போடவைத்து, அதைவைத்தே ரெய்டு, வசூல் என அவர் அதகளம் செய்வதாகப் புலம்புகிறார்கள் வியாபாரிகள்.
‘மாதா மாதம் ஒவ்வொரு உணவகங்களும் அவருக்குப் படியளக்க வேண்டும். காலம் தவறினால், மொட்டை பெட்டிஷன்கள் மூலமாக நடவடிக்கையைப் பாய்ச்சிவிடுகிறார் அந்த அதிகாரி’ எனப் புலம்புகிறார்கள் மார்க்கெட் பகுதி வியாபாரிகள். ‘உணவுப்பொருள் கலப்படத்தைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை தேவைப்படும் நிலையில், அதைவைத்தே வசூல் வேட்டையும் நடக்கிறது. துறையின் சீனியர் அதிகாரிகள்தான் கருப்பு ஆடுகளைக் களை எடுக்க வேண்டும்’ என்கிறது உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை வட்டாரம்.
டெல்லியில் நடைபெற்ற ஒரு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டியதிருந்ததால், அதுதொடர்பாக முதன்மையானவரிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார் கோட்டையின் உச்ச அதிகாரி. அப்போது உச்ச அதிகாரியிடம், ‘நான் ஊரில் இல்லாத நேரத்தில், சீனியர்களும் ஜூனியர்களும் பல கோரிக்கைகளை உங்களிடம் எடுத்துவருவார்கள். அவர்கள் கேட்டுவிட்டார்களே என எல்லாவற்றையும் செய்து கொடுத்துவிடாதீர்கள். கவனமாகக் கையாளுங்கள். ரொம்பவும் சிக்கலான கோரிக்கை என்றால், என்னைத் தொடர்புகொள்ளுங்கள்…’ என்றாராம் முதன்மையானவர். அதோடு, நிதியைக் கையாளும் அதிகாரியிடமும் சில ஆலோசனைகளை அளித்திருக்கிறாராம். ‘சும்மாவே அந்த அதிகாரி எதையும் செய்துகொடுக்க மாட்டார். இதில், முதல்வர் வேறு உஷார்படுத்தியிருப்பதால், எந்த கோரிக்கையையும் நிறைவேறப்போவதில்லை…’ என நொந்துகொள்கிறார்கள் சீனியர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88