அகமதாபாத் / ராஜ்கோட்: குஜராத் மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த 25-ம் தேதி முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர் சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வேறு இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கனமழை தொடர்ந்து நீடிப்பதால் 33 மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
பருவ மழை காரணமாக குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் வதோதரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பருவ மழை காலத்தில் சராசரியாக பெய்யும் 883 மி.மீ. மழையில், கடந்த 72 மணி நேரத்தில் மட்டும் (ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் மட்டும்) 20 சதவீத மழை பெய்துள்ளது. அத்துடன் கடந்த திங்கட்கிழமை ஒரு நாளில் மட்டும் 94 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது மிக அதிகபட்ச மழையாகும்.
வெள்ளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது, வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டவர்கள் என மொத்தம் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் பிளாட்பாரங் களில் காத்திருக்கின்றனர். சுமார் 33 விமானங்கள் தாமதமாக வந்தன. 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு மழைநிலவரம் குறித்து கேட்டறிந்தார். மேலும் பிரதமர் மோடி கூறுகையில், ‘‘கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மக்களுடன் மத்திய அரசு துணை நிற்கிறது. மாநிலத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்’’ என்று உறுதி அளித்துள்ளார்.