சிவாஜி சிலை உடைந்த விவகாரம்; 100 முறை மன்னிப்பு கேட்க தயார் – ஏக்நாத் ஷிண்டே

மும்பை,

மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி கடற்படை தினத்தில் பிரதமர் மோடியால் இந்த சிலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த 35 அடி உயர சிலை கடந்த 26-ந்தேதி மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கனமழை பெய்ததாகவும், பலத்த காற்று வீசியதாகவும், சிலை உடைந்ததற்கான காரணம் குறித்து நிபுணர்கள் உறுதி செய்வார்கள் என்றும் கூறினார்.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியின் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, சிலைக்கான தரத்தில் மராட்டிய அரசு பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை என குற்றம்சாட்டினார். சிவசேனா (உத்தவ் தாக்கரே) எம்.எல்.ஏ. வைபவ் நாயக்கும், சிலையின் தரம் குறித்து அரசை விமர்சித்தார்.

இந்த நிலையில், சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும், இந்த சம்பவத்திற்காக சத்ரபதி சிவாஜியின் பாதம் பணிந்து 100 முறை மன்னிப்பு கேட்க தயார் எனவும் மராட்டிய மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது;-

“அரசியலாக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. சத்ரபதி சிவாஜி நம் அனைவரின் அடையாளம். அவர் எங்கள் கடவுள். அவரது காலடியில் தலை வைத்து ஒரு முறை அல்ல 100 முறை நான் மன்னிப்பு கேட்பேன். அவரை முன்னுதாரணமாக கொண்டு நாங்கள் அரசு விவகாரங்களை நடத்தி வருகிறோம். அதனால் நான் அவர் முன் தலைவணங்குகிறேன். தயவு செய்து இந்த விவகாரத்தை அரசியலாக்காதீர்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.