கொச்சி: மலையாள நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ-வுமான முகேஷ் உட்பட ஐந்து பேர் மீது கேரள காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது. நடிகை கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை, சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கமிட்டியின் அறிக்கையைத் தொடர்ந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.
முகேஷுக்கு எதிரான புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் 376 (பாலியல் வன்புணர்வு) பிரிவின் கீழ் மராடு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் ஐபிசி 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே பிரிவுகளின் கீழ் மலையாள திரை கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர், நடிகர் எடாவெலா பாபு மீது எர்ணாகுளம் டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வி.எஸ்.சந்திரசேகரன் மீது ஐபிசி 376 பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் மரியன் பில்லா ராஜு மற்றும் தயாரிப்பு பணிகளை கவனிக்கும் நோபல் மீது ஐபிசி 354 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் கீழ் கொச்சி காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளை டிஐஜி அஜீத் பேகம் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. புகார் அளித்த நடிகையிடம் டிஐஜி அஜீத் பேகம் புதன்கிழமை அன்று வாக்குமூலத்தை பெற்றார்.
இந்த சூழலில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கண்டன குரலும் எழுந்துள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயசூர்யா மீது பல ஆண்டுகளுக்கு முன்னர் நடிகை ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.