மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தாக்குதல்; 9 பாலஸ்தீனியர்கள் பலி

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபரில் கொடூர தாக்குதல் நடத்தியது. இதில், இஸ்ரேல் மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். பணய கைதிகளாக சிலர் சிறை பிடித்து செல்லப்பட்டனர். அந்த நாளில் இருந்து, இரு தரப்பினருக்கும் இடையேயான மோதல் முற்றியுள்ளது.

இதில், மேற்கு கரை பகுதி, காசா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. எனினும், காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளனர்.

இந்த தாக்குதல் தொடங்கப்பட்டதில் இருந்து தினசரி அடிப்படையில் மேற்கு கரை பகுதியில், இஸ்ரேல் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனை இஸ்ரேல் ராணுவமும் உறுதிப்படுத்தி உள்ளது. இதன்படி, மேற்கு கரை பகுதியின் ஜெனின் மற்றும் துல்காரெம் நகரங்களில் இயங்கி வருகிறோம் என ராணுவம் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்த மேற்கு கரை பகுதியில் இதுவரை 600 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இஸ்ரேலின் இதுபோன்ற திடீரென நடத்தப்படும் தாக்குதலில் பலரும் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், துபாஸ் பகுதியில் 7 பேர் இன்று காலை உயிரிழந்தனர். ஜெனின் பகுதியில் 2 பேர் உயிரிழந்தனர் என பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஜெனின் பகுதியில் பலியான அந்த 2 பேர் குவாசம் ஜபரின் (வயது 25) மற்றும் ஆசிம் பாலவுட் (வயது 39) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

மேற்கு கரை பகுதியில் பல கட்டிடங்களை கட்டியுள்ள இஸ்ரேல், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களின் குடியிருப்பாக அதனை மாற்றி அவர்களுக்கு குடியுரிமையும் வழங்கியிருக்கிறது. எனினும், இஸ்ரேல் ராணுவ ஆட்சியின் கீழ் இந்த பகுதியில் 30 லட்சம் பாலஸ்தீனியர்கள் வசித்து வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.