பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிகாடு அபுபக்கர் தெருவைச் சேர்ந்தவர் முகமது சமீம் (வயது: 33). இவர், லப்பைக்குடிகாடு மெயின் ரோட்டில், கம்ப்யூட்டர் சென்டர் ஒன்றை நடத்தி வந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த முகமது சாஜித் (வயது: 19) என்பவர், வாக்காளர் அடையாள அட்டை பெற விண்ணப்பிக்க இவரை அணுகினார். அவரிடம் 250 ரூபாய் பெற்றுக்கொண்ட முகமது சமீம் வாக்காளர் அடையாள அட்டை தயாரித்து வழங்கினார். அந்த அட்டையை ஆதாரமாக வைத்து, முகமது சாஜித் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தார். இந்நிலையில், அது குறித்த போலீஸ் விசாரணையில், அவரது வாக்காளர் அடையாள அட்டை போலியானது எனத் தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸாரின் விசாரணையில் முகமது சாஜித்துக்கு தயாரித்து வழங்கியதுபோல, முகமது சமீம் பலருக்கும் போலி வாக்காளர் அடையாள அட்டையை தயாரித்து வழங்கியது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸார் அவரை சிறையில் அடைத்தனர். போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த பெரம்பலூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீஸார் கைதுசெய்துள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.